Published : 10 Jan 2020 08:30 AM
Last Updated : 10 Jan 2020 08:30 AM

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு? - சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை

தமிழ் வழியில் பள்ளிபடிப்பை படித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகரை சேர்ந்த என்.முருகேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்
துள்ளார்.

அந்த மனுவில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும், 5 ஆயிரத்து 400 மாணவர்கள் சேர்க்கப்படும் நிலையில், பிளஸ் 2 வரை தமிழ் வழிக்கல்வி படித்தவர்கள் பெரும்பாலும் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பிய விண்ணப்பத்தின் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்த 106 மாணவர்கள் மட்டுமே, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாவும் இது தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நீட் நுழைவுத் தேர்வில், தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள் மொழிச் சிறுபான்மையினர் என்பதால், தமிழ் வழி படித்த மாணவர்களின் நம்பிக்கையயும், நலனையும் பாதுகாக்க வேண்டும் எனவும், இதுதொடர்பாக, நவம்பர் 2, டிசம்பர் 11 தேதிகளில் தமிழக முதல்வர், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர், தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் ஆகியோருக்கு அளித்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, பிப்ரவரி 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசு சுகாதாரத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, மருத்துவ கல்வி இயக்குனரகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான 'நீட்' பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை (NTA) இந்தத் தேர்வை நடத்துகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் 2016-ம் ஆண்டு வரை பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால், 2017-ம் ஆண்டில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அஸாமி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, உருது ஆகிய மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என நான்கு பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்க்ணுக்குத் தேர்வு நடைபெறுகிறது. ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்தால் 4 மதிப்பெண் வழங்கப்படும். அதே நேரம், தவறான பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் (Negative marking). ஒரே கேள்விக்கு பல பதில்களை அளித்தாலும், அது தவறான பதிலாகவே கருதப்படும்.

ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வை எழுத முடியும். இடஒதுக்கீடு பெறும் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதுக்குள் மூன்று முறையும், பிறமாணவர்கள் 25 வயதுக்குள் 3 முறையும் நீட் தேர்வை எழுத முடியும். ஆனால், இதில் கேட்கப்படும் கேள்விகள் மாநில பள்ளி கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில் அல்லாமல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து கேட்கப்படுகிறது.

இதனால், மாநில பாடத்திட்டத்தை பின்பற்றிவரும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அது மட்டுமின்றி தமிழக பள்ளி கல்வி பாடத்திடமானது தகவமைக்கப்படாததும் பெரிய சிக்கலாக எழுந்தது.

இதனை அடுத்து நீட் தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில், பள்ளிப் பாடத் திட்டங்களை மாற்றி அமைத்து, செழுமைபடுத்தும் பணியில் தமிழக கல்வித் துறை 2017-ல் இறங்கியது. இதனை அடுத்து புதியபாடத்திட்டம் வகுக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. இருப்பினும் சி.பி.எஸ்.இ.யில் படித்து வரும் மாணவர்கள்கூட பயிற்சி மையங்களில்
சேர்ந்து நீட் தேர்வுக்கான பிரத்யேக பயிற்சியை மேற்கொள்வதன் மூலமாக மட்டுமே இத்தேர்வில் வெற்றிபெற முடிகிறது என்ற சிக்கல் எழுந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில் நீட் தேர்வுகான பயிற்சிகள் இலவசமாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் திட்டம் 2017-ல் இருந்து கொண்டு வரப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x