Published : 09 Jan 2020 11:58 AM
Last Updated : 09 Jan 2020 11:58 AM

செய்திகள் சில வரிகளில் - சிம்லாவுக்கு சுற்றுலா வரவேண்டாம்: இமாச்சல் போலீஸார் அறிவுறுத்தல்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் சிம்லா உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் வெள்ளை போர்வை போத்தியதுபோன்று காணப்படுகிறது. இந்நிலையில், சிம்லாவுக்கு சுற்றுலா வந்த நபர்கள் சாலைகள் தெரியாத அளவுக்கு பனிகளுக்கு நடுவே நடந்துச் செல்கின்றனர்.படம்: பிடிஐ

சிம்லா

இமாச்சல பிரதேசத்தின் சிம்லா உள்ளிட்ட பல பகுதியில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்த காலத்தில் உலகில் பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

ஆனால் இமாச்சல் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சிம்லா வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ சிம்லாவில் 20 செ.மீ. பனிபொழிவு உள்ளது. அதேபோல், சம்பாவில் 35.செ.மீ., மணாலியில் 22 செ.மீ., கராபத்தர் பகுதியில் 60 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, இமாச்சல் பகுதியில் 250-க்கும் அதிகமான சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவேண்டாம் என்று சிம்லா போலீஸ் எஸ்பி ஓமபதி ஜம்வா, சிம்லா போலீஸின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சீட்டுக்கு பதில் கியூஆர் கோட்

புதுடெல்லி

தலைநகர் டெல்லியில் உள்ள சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. மொத்தம் 1.46 கோடி மக்கள் வாக்காளர் இறுதிப் பட்டியலில் உள்ளனர். இந்நிலையில், 70 சட்டப்பேரவை தொகுதிகளில் 11 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி, கியூஆர் கோட் மூலம் வாக்குச் செலுத்தலாம் என்று டெல்லி தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரன்பீர் சிங் கூறியதாவது: வாக்குச் சீட்டு இல்லாமல் ஸ்மார்ட் போனில் உள்ள கியூஆர் கோட் மூலம் வாக்களிக்கும் முறையை அமல்படுத்த, முதற்கட்டமாக 11 தொகுதிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளன.

வாக்குச் சீட்டு இல்லாமல் வரும் வாக்காளர்கள், தங்களின் ஸ்மார்ட் போனில்‘வாக்காளர்கள் உதவி செயலி’யை பதிவிறக்கம் செய்துக் கொண்டு அதன்மூலம் வாக்களிக்கலாம். இதற்காக வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ரன்பீர் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x