Published : 09 Jan 2020 08:17 AM
Last Updated : 09 Jan 2020 08:17 AM

செய்திகள் சில வரிகளில்: ஓரிரு நாட்களில் விடை பெறுகிறது வடகிழக்கு பருவமழை

சென்னை

‘‘வடகிழக்குப் பருவமழை ஓரிரு நாட்களில் நிறைவடையும்’’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று கூறியதாவது:

காற்றின் வேகம் மாறுவதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்..

வடகிழக்குப் பருவமழை 9-ம் தேதி (இன்று) அல்லது ஓரிரு நாட்களில் நிறைவடையக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அதிகபட்சமாக 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கலை நயத்துடன் செல்பி அருங்காட்சியகம் துபாயில் தொடக்கம்

துபாய்

உலகம் முழுவதும் புகைப்பட மோகம் என்பது அதிகமாகிவிட்டது. அதிலும் ஸ்மார்ட்போன்கள் மூலம் ‘செல்பி’ எடுத்துக் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காகவே பிரத்யேக ஸ்மார்ட்போன்களும் வந்துவிட்டன. இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்தில் செல்பி பிரியர்களுக்கென ‘செல்பி அருங்காட்சியகம்’ உலகிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

‘தி செல்பி கிங்டம்’ (டிஎஸ்கே) என்று அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. புகைப்படம் எடுப்பதற்காக தொடங்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள் வாழ்வின் நினைவுகளில் ஒன்றாக பதியும் அளவுக்கு பல்வேறு வண்ணங்கள், நிழல்கள், செல்பிக்கான பின்னணிகள் என பல அம்சங்கள் உள்ளன.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x