Published : 08 Jan 2020 11:34 AM
Last Updated : 08 Jan 2020 11:34 AM

ஸ்ரீ ஹரிகோட்டா சென்று திரும்பிய அன்னூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

ஸ்ரீ ஹரிகோட்டா சென்று திரும்பிய அன்னூர் அரசு பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர். கோவையை அடுத்த அன்னூர் தெற்கு பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வி.ஹரிகிஷோர், எஸ்.சபரி ஆகாஷ் ஆகியோர், ஸ்ரீ ஹரிகோட்டாவில் நடைபெற்ற விண்ணில் பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அம்மாணவர்கள் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணனை சந்தித்து, ஸ்ரீஹரிகோட்டா அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு அவரிடம் வாழ்த்து பெற்றனர். இதுகுறித்து மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியை சு.சர்மிளா பாய் கூறும்போது, "சென்னையில் உள்ள ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தி அதில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்வு செய்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்துக்கு, பிஎஸ்எல்வி ராக்கெட் (சி-48) ஏவும் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

எங்கள் பள்ளியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இருமாணவர்களை, வட்டாரக் கல்வி அலுவலர் ரங்கராஜ், தலைமை ஆசிரியை ந.ஜீவலதா ஆகியோரின் அனுமதியுடன் வழிகாட்டி ஆசிரியையாக அவர்களுடன் சென்று, அங்கு நடைபெற்ற நிகழ்வுகளைக் காண்பித்து, விளக்கமளித்தேன். இந்த பயணம் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் குறித்த அனுபவங்களைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x