Published : 08 Jan 2020 10:42 AM
Last Updated : 08 Jan 2020 10:42 AM

மாணவர்களுக்கு தயாராகும் இலவச மிதிவண்டி

கோவை தேவாங்க மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விலையில்லா மிதிவண்டிகளின் உதிரிபாகங்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். படம்: ஜெ.மனோகரன்.

கோவை

த.சத்தியசீலன்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி கோவையில் தயாராகி வருகிறது. உதிரி பாகங்களை இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, பள்ளி படிப்பைப் பயில தகுதியுடைய மாணவர்களுக்கு தடையின்றி கல்வியை அளிக்கும் வகையிலும், அவர்கள் பள்ளி படிப்பை முழுமையாகக் கற்று நிறைவு செய்யும் வகையிலும் தமிழக அரசால் மாணவர் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மடிக்கணினி, சிறப்பு ஊக்கத்தொகை, 4 ஜோடி சீருடைகள், மலைப்பகுதி மாணவர்களுக்கு ஸ்வெட்டர், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் (புவியியல் வரைபடம், புத்தகப்பை, ஜியாமென்ட்ரி பாக்ஸ் போன்றவை), காலணி, மிதிவண்டி, சத்துணவு, இலவச பயண அட்டை, பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு துயர்துடைப்பு நிதி, வேலைவாய்ப்புக்கு பதிவு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தயாரிப்பு பணி மும்முரம்

இவற்றில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குதவற்காக, அவற்றை தயார் செய்வதற்கான பணிகள் கோவை புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள தேவாங்க மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை மூலமாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பிளஸ் 1 மாணவர்களுக்கு

இதன்படி நடப்பு கல்வியாண்டில் (2019-2020) பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் தகுதியுள்ள மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் இக்கல்வியாண்டின் இறுதிக்குள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக பள்ளி கல்வித்துறை மூலமாக கோவை மாவட்ட பிளஸ் 1 மாணவர்களுக்கு தேவையான மிதி வண்டிகள் பெறப்பட்டு வருகின்றன. உதிரிபாகங்களாக பிரித்து கொண்டு வரப்படும் மிதிவண்டிகள், கோவையில் உள்ள சில குறிப்பிட்ட பள்ளிகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டு, தொழிலாளர்கள் மூலமாக இணைக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான மிதிவண்டிகள், மாணவிகளுக்கான மிதிவண்டிகள் தனித்தனியாக இணைக்கப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் முடிந்ததும் அதிகாரிகள் முன்னிலையில் மதிவண்டிகளின் பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பி நிகழ்ச்சிகள் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x