Published : 08 Jan 2020 09:43 AM
Last Updated : 08 Jan 2020 09:43 AM

‘ககன்யான்’ விண்கலத்தில் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு இட்லி, சாம்பார், உப்புமா, அல்வா சிறப்பு உணவு, சூடு படுத்தும் கருவி கொடுத்தனுப்ப இஸ்ரோ முடிவு

புதுடெல்லி

‘ககன்யான்’ திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் வீரர்களுக்கு இட்லி, சாம்பார், உப்புமா, அல்வா உட்பட 30 விதமான சிறப்பு உணவுகளை கொடுத்தனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவெடுத்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் உலகிலேயே விண்ணுக்கு அனுப்பும் 4-வது நாடாக இந்தியா விரைவில் இடம்பெற உள்ளது. அதற்காக ‘ககன்யான்’ என்ற பெயரில் மிகப்பெரிய திட்டப் பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தத் திட்டம் ரூ.10 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், வரும் 2022-ம் ஆண்டு இறுதியில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ககன்யான் திட்ட விண்கலத்தில் 3 பேர் வீரர்கள் விண்வெளி செல்ல உள்ளனர். உண்மையில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைப்பதற்கான ககன்யான் திட்ட சோதனைகள், கடந்த 2004-ம் ஆண்டே தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த முறை இஸ்ரோவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களுக்குப் பதில், விமானப் படையைச் சேர்ந்த வீரர்கள் சிலர் முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போதைக்கு விண்வெளிக்கு அனுப்பி வைக்க 4 வீரர்கள் முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த மாத இறுதியில் ரஷ்யாவில் பயிற்சி தொடங்க உள்ளது என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

இறுதிகட்டமாக அனைத்து மருத்துவ சோதனைகள், உளவியல் சோதனைகள் மற்றும் தொழில்நுட்ப சோதனைகள், பயிற்சிகளை வெற்றிகரமாக முடிக்கும் 3 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

ககன்யான் விண்கலம் விண்வெளியில் பூமியை தாழ்வான நிலையில் இருந்து 7 நாட்கள் சுற்றிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்துக்கு தேவையான கருவிகள், உதிரி பாகங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து வழங்கி வருகிறது. இதற்காக டிஆர்டிஓ.வுடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி, விண்வெளியில் 7 நாட்கள் தங்கி ஆய்வு செய்யும் 3 வீரர்களுக்கு தேவையான உணவுகள், அவர்களுக்கு அவசர கால உயிர் காக்கும் கருவிகள், அவர்கள் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிப்பது, விண்கலம் தரையிறங்கும் போது அதை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான பாராசூட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் டிஆர்டிஓ வழங்க உள்ளது. இந்நிலையில், விண்வெளி செல்லும் வீரர்களுக்கு எந்த வகையான உணவு வகைகளை கொடுத்தனுப்புவது என்று தீவிர ஆலோசனைநடத்தப்பட்டது. இதில் 30 வகை உணவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் இட்லி, சாம்பார், உப்புமா, சைவ புலாவ், வெஜ் ரோல், எக் ரோல், பாசிப்பயறு அல்வா ஆகியவையும் அடங்கும். தவிர சிக்கன் பிரியாணி, சிக்கன் குருமா உட்பட சில உணவுகளும் இருக்கும் என்று தெரிகிறது. தவிர குடிநீர், பழச்சாறுகளும் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இந்த உணவு வகைகள் அனைத்தையும், டிஆர்டிஓ.வின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மைசூருவில் உள்ள பாதுகாப்புத் துறை உணவு ஆராய்ச்சி ஆய்வகம் தயாரிக்க உள்ளது. உணவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கு வசதியான பாத்திரங்கள் (கன்டெய்னர்), மற்றும் விண்வெளியில் உணவுகளை சூடுபடுத்துவதற்கான சிறப்பு கருவி ஆகியவற்றையும் டிஆர்டிஓ தயாரித்து வழங்க உள்ளது.

விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லை என்பது தெரியும். அங்கு பொருட்கள் மிதக்கும். அந்த இடத்தில் குடிநீர், பழச்சாறு ஆகிய திரவங்களை எளிதில் பருக முடியாது. எனவே, திரவ பொருட்களை பருகுவதற்கு வசதியாக சிறப்பு பாட்டில்கள் வடிவமைக்கப்பட உள்ளன. முக்கியமாக குப்பைகள், உணவு கழிவுப் பொருட்களை போடுவதற்கும் சிறப்பு பை தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் தயாரிக்கப்பட்டு ககன்யான் விண்கலத்தில் செல்லும் வீரர்களுடன் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

ஐ.நா.வில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. தவிர அங்கீகரிக்கப்படாத சில நாடுகளும் உள்ளன. அந்த வகையில் உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. ஆனால், பல துறைகளில் உலகின் வளர்ந்த நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பல துறைகளில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது மிகப்பெரிய சாதனை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x