Published : 07 Jan 2020 08:45 AM
Last Updated : 07 Jan 2020 08:45 AM

அரை நூற்றாண்டுக்கு பின் நெகிழ்ச்சி சந்திப்பு: பால்ய நண்பர்களின் பாசமழையில் நனைந்த பள்ளி

எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி அருகே காளாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆரம்பத்தில் இந்து உயர்நிலைப் பள்ளி என்ற பெயரில் அரசு உதவி பெறும் பள்ளியாக செயல்பட்டது. இந்த பள்ளியில் கடந்த 1963 முதல் 1974-ம் ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி படித்த மாணவ, மாணவியர் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் ஆசிரியர், மருத்துவர், பொறியாளர் எனப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர்.

இவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் காளாம்பட்டியில் தாங்கள் பயின்ற பள்ளி வளாகத்தில் சந்தித்தனர். தங்களது தலைமை ஆசிரியர் ஜி.ராதாகிருஷ்ணனை அழைத்து வந்து கவுரவித்தனர். “நாங்கள் படிக்கும்போது ஆசிரியர் ஜி.ராதாகிருஷ்ணன் தலைமை ஆசிரியராகவும், ஆங்கில ஆசிரியராகவும் இருந்தார். அவர் ஒரு ஆங்கிலப் பாடத்தை 9 பாடவேளைகள் வரை நடத்துவார். நாங்கள் கவனிக்காமல் இருந்தால் பளார் என்று அரை விழும். அடுத்த நிமிடமே எங்களை சிரிக்கவும் வைத்துவிடுவார்” என தனது பள்ளி கால நினைவுகளை ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி சாத்தூரப்பன் பகிர்ந்து கொண்டார்.

கோவை ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கணித பேராசிரியை எஸ்.தனலட்சுமி, “பள்ளிக் காலம் என்றாலே உடற்கல்வி ஆசிரியர் கோவிந்தசாமி, தமிழ் ஆசிரியர் ராமச்சந்திரன் ஆகியோர் தான் நினைவுக்கு வருகின்றனர். கோவிந்தசாமி சார் மைதானத்தில் மாணவர்களுக்கு கொடுக்கும் கமாண்ட் ஊருக்கே கேட்கும். அந்தளவுக்கு அவரது குரலில் கம்பீரம் இருக்கும். ராமச்சந்திரன் சார் இலக்கணம் நடத்தினால், அதை வீட்டுக்குச் சென்று படிக்கவே வேண்டாம். அந்தளவுக்கு நினைவில் இருக்கும்” என்றார்.

கோவில்பட்டி லக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆழ்வார்சாமி கூறும்போது, “என்னுடன் படித்த மாணவ, மாணவிகளை சந்திக்க வைக்க வேண்டும் என்று எண்ணினேன். இதற்கு பெரும் உதவியாக இருந்தது வாட்ஸ் அப் தான். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் கலந்து கொண்டவர்களில் குறைந்த வயது 60. அதிகம் 75. இங்கு வந்தபோது யாரையும் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அடையாளம் கண்டு பேசிக்கொண்டது கவிதைப்பூர்வமான அனுபவம். சுமார் 85 வயதை கடந்துவிட்ட எங்களது ஆசிரியர்கள் 16 பேரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவர்களை அழைத்து வந்து கவுரவித்துள்ளோம்” என்றார் அவர்.

இந்தியன் வங்கி மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஏ.ராஜேந்திரன் கூறும்போது, “கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலையை தவிர்த்து அப்போது உயர்நிலைப் பள்ளி கிடையாது. இதனைக் கருத்தில் கொண்டு எனது தாத்தா கோபால்சாமி நாயக்கர் 1952-ல் இப்பள்ளியை தொடங்கினார். 1962-ல் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்ந்தது. அப்போது தனியார் நிர்வாகம் தான் சம்பளம் தர வேண்டும். இதனால் சில மாதங்கள் ஆசிரியர்கள் சம்பளம் இல்லாமல் கூட வேலை பார்த்துள்ளனர். 1973-ம் ஆண்டு தான் இந்த பள்ளி அரசு பள்ளியாக மாறியது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x