Published : 06 Jan 2020 02:44 PM
Last Updated : 06 Jan 2020 02:44 PM

குழுப் படிப்பு சரியா?- மாணவர்கள் எப்படி படிக்க வேண்டும்?: 10 ஆலோசனைகள்

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று தொடங்கிவிட்டன. உற்சாகத்துடனும் பயனுள்ள வகையிலும் விடுமுறைகளைக் கழித்து, புத்துணர்ச்சியுடன் மாணவர்கள் வகுப்புக்கு வந்துவிட்டனர்.

அவர்கள் தங்களின் பாடங்களைச் சிறப்பாகப் படிப்பதற்கான முக்கியக் குறிப்புகள் இதோ:

1. ஒரு நேரம் - ஒரே பாடம்

ஒரு நேரத்தில் ஒரு பாடத்தை மட்டும் படிக்க வேண்டும். உதாரணமாக ஆங்கிலப் பாடத்தைப் படிக்கத் தொடங்கினால் அதில் படிக்க வேண்டிய பகுதிகளை படித்து முடித்த பிறகே வேறு பாடத்தைப் படிக்கத் தொடங்க வேண்டும்.

2. கால அட்டவணையைத் தயாரித்தல்

முதலில் பள்ளி வேலை நாள், விடுமுறை நாள் என இரண்டு விதமான கால அட்டவணையை உங்கள் நேரத்திற்குத் தகுந்தற்போல் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கால அட்டவணையில் நீங்கள் எந்தப் பாடத்தைக் கடினமாக கருதுகிறீர்களே அந்தப் பாடத்திற்கு மற்ற பாடங்களை விட கூடுதலாக நேரத்தை ஒதுக்கிப் படியுங்கள்.

3 . எளிமையாக பாடங்களைப் படிக்கலாம்

ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது போன்று நினைத்துக்கொண்டு உங்கள் நண்பனுக்கு நீங்கள் பாடத்தை நடத்தினால் எளிமையாக பாடங்கள் புரியும். பிறருக்குச் சொல்லித் தந்தால் பாடங்கள் நன்கு மனதில் பதியும்.

4. நிலையான இடம்

படிப்பதற்கு ஒரு நாள் சமையலறை, ஒரு நாள் மாடிப்படி, ஒரு நாள் கிணற்றடி என ஒவ்வொரு நாளும் ஓர் இடத்தில் அமர்ந்து படிக்காதீர்கள். முதலில் படிப்பதற்கு என்று நிலையான ஒரு இடத்தைத் தேர்வு செய்யுங்கள். அது வெளிச்சமும், காற்றோட்டமும் நிறைந்த ஒரு தனி அறையாக இருப்பது சிறப்பு. அதுமட்டுமின்றி புத்தகங்களைப் பாடவாரியாக அலமாரியில் அடுக்கி வையுங்கள். இது புத்தகங்களைத் தேடுவதற்காக அதிக நேரம் நீங்கள் செலவு செய்வதைத் தடுக்கும். அதைப் போல தண்ணீர் பாட்டில் ஒன்றில் நீர் நிரப்பி வைத்துக் கொண்டும், படிப்பதற்குத் தேவையான புத்தகம், நோட்டு, குறிப்பேடுகள், பேனா, பென்சில், ரப்பர் போன்றவற்றை அருகில் வைத்துக் கொண்டும் படிக்கத் தொடங்குங்கள்.

5. அரை வயிறு உணவு... முழு நேரப் படிப்பு...

வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு படிக்க உட்கார்ந்தால் படிப்பு வராது தூக்கம்தான் வரும். எனவே, உணவை இரண்டாகப் பிரித்து படிக்கத் தொடங்குவதற்கு முன்பாக சிறிதளவு சாப்பிட்டுவிட்டு, பாடங்கள் முழுவதையும் படித்து முடித்த பின்பு நன்கு சாப்பிட்டுவிட்டு உறங்குங்கள்.

6. ஒரு பாடம், ஒரு கலர்

ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு வகை கலர் பேனாவை (High lighter) பயன்படுத்தி முக்கியக் குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள் உதாரணமாக கணிதப் பாடத்தில் உள்ள முக்கிய சூத்திரங்களை நீலநிறப் பேனாவைப் பயன்படுத்தி கட்டமிட்டுக் கொள்ளுங்கள். சமூக அறிவியல் பாடத்தில் உள்ள முக்கிய ஆண்டுகளை ஆரஞ்சு நிறப் பேனாவால் கோடு போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த வண்ணங்கள் தேர்வின்போது விடைகளை உங்கள் நினைவுக்குக் கொண்டு வர உதவும்.

7. குழுப் படிப்பு

தேர்விற்கு ஒரு நாளுக்கு முன்பு குழுவாகப் படிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அப்போது அரட்டைகளும், கிண்டல்களும், விவாதங்களும் வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. எனவே தேர்விற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஒரு நான்கு பேரை உடைய சிறிய அளவிலான குழுவுடன் படித்ததை ஒரு மீள்பார்வை செய்யலாம். தாங்கள் தனியாகப் படித்த முக்கிய வினாக்களை குழுவில் பகிர்ந்து கொள்ளலாம்.

8. தள்ளிப் போடுதல்

தேர்வின்போது உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய பிரச்சினைகளை மாணவர்கள் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், மிகுந்த பயத்துடனே நிறைய மாணவர்கள் தேர்வினை எதிர்கொள்கிறார்கள். இதனைத் தடுக்க எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தேர்விற்குப் பிறகு நான் இந்தப் பிரச்சினையை பார்த்துக்கொள்வேன் என பிரச்சினையைத் தள்ளிப் போடுங்கள்.

"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" என்ற பழமொழிக்கு ஏற்ப மனதை மயிலிறகு போல லேசாக வைத்துக் கொள்ளுங்கள். படிப்பதற்கு முதல் தேவை மனம். அம்மனதைத் தயார்படுத்திக் கொண்டு புத்தகத்தை எடுத்தால் தொட்டதெல்லாம் வெற்றிதான்.

9. எழுதிப் பார்த்தல்

"பழகப் பழகப் பாலும் புளிக்கும்"என்பார்கள் நம் முன்னோர்கள். இது உண்மைதான். ஒரு கருத்தை இருபது முறை படித்துக் கொண்டே இருப்பதை விட ஒரு முறை எழுதிப் பார்த்தால் நன்கு மனதில் பதியும். ஒரு முறை எழுதிப் பார்ப்பது பத்து முறை படித்ததற்குச் சமம்.

10. அதிகாலைப் படிப்பு

இரவில் சீக்கிரமாகத் தூங்கச் செல்லுங்கள். அதிகாலை மிகச் சீக்கிரமாக எழுந்திருக்கப் பழகுங்கள். அதிகாலை நேரத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் அமைதியான சூழ்நிலை இருக்கும். அதுமட்டுமின்றி நமது மூளையும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எனவே கடினமான பாடங்களைக்கூட அதிகாலையில் சுலபமாகப் படித்து விடலாம்.

- வெ.மணிகண்டன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x