Published : 06 Jan 2020 10:07 AM
Last Updated : 06 Jan 2020 10:07 AM

தடைகள் தாண்டிய கதையைப் பகிர்ந்த மாணவி காயத்ரி: கண் கலங்கிய சூர்யா - இணையத்தில் குவியும் வாழ்த்து மழை

தடைகளைத் தாண்டி வளர்ந்த கதையை மாணவி காயத்ரி மேடையில் பகிர்ந்த போது, கண் கலங்கி அழுதார் சூர்யா. இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. பலரும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் அகரம் அறக்கட்டளை சார்பாக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பேராசிரியர் ச. மாடசாமி எழுதிய 'வித்தியாசம்தான் அழகு' மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரியான மாணவர்கள் எழுதிய அனுபவங்களின் தொகுப்பான 'உலகம் பிறந்தது நமக்காக' ஆகிய இரண்டு நூல்களையும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

இந்த விழாவில் அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா, பேராசிரியர் ச. மாடசாமி, ராம்ராஜ் காட்டன் நாகராஜ், சத்யபாமா பல்கலைக் கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், சரவணா ஸ்டாக்ஸ் தலைவர் சத்தியமூர்த்தி, பேராசிரியர் காளீஸ்வரன் உள்ளிட்ட பலருடன் அகரம் பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் காயத்ரி என்ற மாணவியின் பேச்சு தான் அனைவரையும் நெகிழ வைத்தது. வாழ்க்கையில் எந்த மாதிரியான தடைகளையெல்லாம் கடந்து வந்துள்ளேன் என்று அவர் பேசப் பேச சூர்யா தொடர்ச்சியாகக் கண் கலங்கி அழத் தொடங்கினார்.

விழாவில் மேடையில் மாணவி காயத்ரி பேசும் போது, "நான் அகரத்தின் 2017-ம் ஆண்டு மாணவி. என் பெயர் காயத்ரி. கடந்த மூன்றாண்டுகளில் என்னுடைய கல்விப் பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். தஞ்சாவூரில் சிறு கிராமம் என்னுடையது. அப்பா கல் உடைப்பது, கல்யாண வேலைக்குப் போவது எனச் சின்ன சின்ன வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவும் தினமும் 150 ரூபாய் சம்பளத்துக்குக் கூலி வேலைக்குச் சென்றார்.

அரசாங்கப் பள்ளியில் எனது கல்விப் படிப்பை முடித்தேன். மேலும் படிக்க ஆசை. ஆனால் அதற்கான வசதி இல்லை. தம்பியும் 9-ம் வகுப்பு தான் படிக்கிறான். இந்தநிலையில், அப்பாவுக்கு கேன்சர் என ரிசல்ட் வந்துவிட்டது. அதுமட்டுமா? ’கூரை வீடு வேறு ஒழுகுகிறது என்னம்மா பண்றது வேலைக்குப் போகட்டுமா’ என்று அம்மாவிடம் போய் அழுதேன்.

என்னுடைய ஆசையும், அப்பாவின் ஆசையும் நான் ஆசிரியராக வரவேண்டும் என்பது தான். அதனால் ’நீ படிம்மா.. பிச்சை எடுத்தாவது உன்னைப் படிக்க வைக்கிறேன்’ என்றார். நான் நம்பிக்கையுடன் என் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அக்கா ஒருவர் மூலமாக அகரத்துக்கு கடிதம் எழுதிப் போட்டேன். என் பெண்ணுக்குத் துணையாக நான் சென்னைக்குப் போறேன் என்று என்னுடன் சென்னை கிளம்பி வந்தார் அப்பா. கல்லூரியில் இடம், தங்க இடம், உணவு எல்லாம் கிடைத்தது. இதன் பிறகு, அப்பாவின் மரணச் செய்தி தான் காதுக்கு வந்தது.

அதற்கு முன்பாக நடந்த ஒரு சம்பவம் தான் என்னை இன்னும் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. ஒருநாள் அப்பா என்னை அழைத்து 'நான் நேற்றிரவு வீட்டிற்குள் வந்தேன்' என்றார். ஏனென்றால் அவருக்கு கேன்சர் என்று தெரிந்தவுடன் திண்ணையில் தான் தூங்குவார், யாரிடமும் பேசுவதில்லை. பாத்திரம் தொடங்கி அனைத்துமே தனித்தனியாக வீட்டில் வைக்கத் தொடங்கினார்கள். ஏனென்றால் கேன்சர் எங்களுக்கும் பரவி விடுமோ என்ற பயம் தான்.

'எதற்காக வந்தீர்கள்' என்று கேட்டேன். அப்போது "கேன்சர் தலை வரைக்கும் வந்துவிட்டது என நினைக்கிறேன் பாப்பா. என்னால் தலைவலி தாங்க முடியவில்லை. மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொள்ளலாம் என்று வந்தேன். ஆனால், விசிறிக்குக் கீழே தம்பி தூங்கிட்டு இருந்தான். காலையில் எழுந்தால் பயந்துவிடுவானே என்று வந்துவிட்டேன் பாப்பா.. நீ நல்லா படிக்கணும்" என்று கையைப் பிடித்துச் சொன்னார். அப்படிப்பட்ட அப்பாவின் மரணத்தின் போது, ’வீட்டுக்கு உடனே வா.. அப்பாவுக்கு ரொம்ப முடியல’ என்று என்னை வரச் சொன்னார்கள்.

வீட்டிற்கு போனால், அப்பா இறந்துகிடந்தார். அப்பா இறக்கும்போது அம்மா பட்ட கஷ்டத்தை அனைவரும் சொல்லிச் சொல்லி அழுதார்கள். அப்பா ரத்த வாந்தியாக எடுத்த போது,ஒரு பாத்திரத்தில் பிடித்து பிடித்து வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பாத்திரம் இல்லாமல் கையில் ஏந்தியிருக்கிறார். கடன் வாங்கி அப்பாவின் இறுதிச் சடங்கை முடித்தோம். சில நாட்களிலேயே அம்மாவுக்கு கர்ப்பப்பையில் கட்டி என்றார்கள். அதையும் கடன் வாங்கி சரி செய்தோம். அப்போது தான் என்னடா வாழ்க்கை இது என்று இருந்த தருணத்தில், ஊக்கமாகப் பயிற்சிப் பட்டறை வந்தது.

புதுப்புது மனிதர்களைச் சந்திப்பதை மட்டுமல்லாமல், புது அனுபவத்தையும் கொடுத்தது. திடீரென்று அம்மாவுக்கு கை உடைந்துவிட்டது. அப்போது தம்பி 10-வது படித்து முடித்துவிட்டான், என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஆகையால் நான் வேலைக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். அப்போது, உன்னைப் படிக்க வைப்பது அகரம். அவர்களுக்கு மரியாதையாக இருக்க வேண்டும் என்று அறிவுரைச் சொன்னார்கள். மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.

நான் போகும் இடங்களில் எல்லாம் உடைகள் சரியில்லை, பேச்சு மொழி சரியில்லை. இவளுக்கு எல்லாம் யார் இந்தக் கல்லூரியில் சீட் கொடுத்தது என்று கேலிப் பேச்சு நிறையவே இருந்தது. நிறைய அவமானங்களைச் சந்தித்தேன். அப்போது தான் 'TO WIN YOU MUST BEGIN' என்பதைக் கற்றேன். சின்ன சின்ன வாய்ப்புகளைக் கூட பயன்படுத்தத் தொடங்கினேன். என்ன கிடைத்தாலும் தைரியமாக வகுப்பறையில் பேசத் தொடங்கினேன். தினமும் பயிற்சி எடுத்துப் பேசிப் பேசி, 3 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

வேலைக்குப் போக டிரெயினிங் போனேன். முதலில் 1500 ரூபாய் கேட்டார்கள். பின்பு 15 நாட்கள் இலவசமாக அகரத்தில் டிரெயினிங் கொடுத்தார்கள். அதில் பயிற்சி எடுத்தேன். ஒவ்வொரு முறையும் வேலையில் HR- வரைக்கும் போவேன். பின்பு வந்துவிடுவேன். என்னடா இது சோதனை என வரும்போதெல்லாம், கடவுள் நமக்குச் சோதனையைக் கொடுப்பதே சாதிக்கத் தான். நாம் சோர்ந்து போகக் கூடாது என்று நினைத்துகொள்வேன். அப்படித்தான் ஒரு இண்டர்வியூவிற்குச் சென்றேன். 3500 பேர் கலந்து கொண்ட இண்டர்வியூவில் 200 பேரைத் தேர்வு செய்தார்கள். அதில் நானும் ஒருத்தி. அன்று சிறப்பாகச் செய்தவர் என்ற பெயரும் எடுத்தேன்.

கேரளாவிலிருந்து ஒரு நிறுவனம் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு வந்தது. அந்த நிறுவனம் வைத்த 4 தேர்விலும் வென்றேன். எங்கள் கிராமத்தில் ஆங்கிலம் பேசினாலே, பெரிய படிப்பு படிச்சுருக்காங்க போல என்று பேசுவார்கள். அதனாலேயே அகரத்தில் பி.ஏ ஆங்கிலம் கேட்டு வாங்கினேன். இன்று கேரளாவில் ஆங்கில பயிற்றுநராக நல்ல சம்பளத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

தூரத்தில் நிற்பது என் பொண்ணுதான் என்று வந்து அணைக்க எங்கப்பா இல்லை என்றாலும் எனக்கு கைக் கொடுக்க அகரம் இருக்கிறது என்று நினைத்துப் பெருமை கொள்கிறேன். சூர்யா அண்ணா எல்லாம் வருகிறார், அவர் முன் பேசப் போகிறேன் என்று அம்மாவிடம் சொன்னேன். அவரால் வரமுடியவில்லை. ஏனென்றால், இப்போது 200 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சென்று வருகிறார். ஆகையால் 'என்னால் வர முடியாது பாப்பா. நீ போயிட்டு வா' என்று அனுப்பினார். முன்பு என்னால் தனியாக வர பயம் இருக்கும். ஆனால் இன்று என்னால் தனியாக வர முடியும்.

சில மணி நேரத்துக்கு முன்பு, சூர்யா அண்ணா முன்பு பேசப் போகிறேன் அம்மா, எல்லாரும் இருக்காங்க என்று போனில் சொன்னேன். உன்னால் பார்க்க முடியவில்லையே அம்மா என்றேன். போன் பண்ணு பாப்பா. நான் லைனில் இருக்கேன். நீ பேசுவதை காதால் கேட்டுக் கொள்கிறேன் என்று லைனில் இருக்கிறார்” என்று கண் கலங்கிப் பேசினார்.

”இதை விட எங்கம்மாவுக்கு எவ்வளவு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துவிட முடியும். ஆண்டவனின் ஆசீர்வாதமாக எனக்குக் கிடைத்த அகரத்துக்கு நன்றி கூறி, பின் வரும் மாணவர்களுக்கு என் வழிகாட்டுதல் என்றைக்குமே இருக்கும் என்று கூறி விடைபெறுகிறேன்” என்று தன் பேச்சை முடித்துவிட்டு, மைக் அருகே வைத்திருந்த போனை எடுத்துக் கொண்டு சென்றார் காயத்ரி.

காயத்ரி பேசி முடிக்கும் வரை, தொடர்ச்சியாகக் கண் கலங்கினார் சூர்யா. பின், காயத்ரி அருகே சென்று அவரின் தோள்களைத் தட்டிக்கொடுத்துத் தேற்றினார். சூர்யா மாணவி காயத்ரியைத் தேற்றி, அரவணைத்த வீடியோதான் தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் சூர்யாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

சூர்யா ரசிகர்கள் இந்த வீடியோ பதிவினைத் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x