Published : 06 Jan 2020 07:42 AM
Last Updated : 06 Jan 2020 07:42 AM

வேலையில்லா திண்டாட்டத்துக்கு தீர்வு காணும் தொழில் முனைவோர் பாடம்: டெல்லி பள்ளிகளில் அறிமுகம்

கோப்புப்படம்

புதுடெல்லி

டெல்லி பள்ளி மாணவர்களுக்கு தொழில்முனைவோர் பாடத்தை டெல்லியின் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொழில்முனைவோர் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பாடத்துக்கென்று பிரத்தியேக பாடத்திட்டம் வகுக்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு கையேடு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளித்த டெல்லி மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரி கூறுகையில், “மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகமாக பங்கேற்றுப்பயிலும் விதமாக தொழில்முனைவோர் பாடம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கதைகள், கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு தலைப்புகள், செயல்பாடுகள், சோதனை முறையில் செய்து பார்த்து அதன் அடிப்படையில் அலசி ஆராய்வது உள்ளிட்டவை அடங்கியதாக இந்த பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தன்னிலை அறிதல், விமர்சனக் கூறு, தொடர்பாற்றல், கவனமாகச் செயல்படுதல் ஆகியவை மாணவர்கள் மத்தியில் இந்தப் பாடம் வழியாக மெருகேற்றப்படும். தொழில்முனைவோர் பாடம் குறித்த மாணவர்களின் அறிதிறனை சோதிக்க எழுத்துத் தேர்வு நடத்த மாட்டோம்.

அதற்கு பதிலாகப் பாட வேளையில் மாணவர்களின் பங்கேற்பின் அடிப்படையில்தான் மதிப்பெண்கள் வழங்கப்படும். மாணவர்களின் தன்னம்பிக்கை, படைப்பாற்றல், வெற்றிபெறும் திறனை வளர்ப்பதே தொழில்முனைவோர் பாடத்தின் அடிப்படை நோக்கமாகும்.” இவ்வாறு கல்வி அதிகாரி தெரிவித்தார்.

பள்ளியிலும் கல்லூரியிலும் படித்து முடித்த பிறகு வேலை தேடி அலைபவராக இல்லாமல் வேலை வழங்குபவர்களாக மாணவர்களை உருவாக்குவதே இந்த பாடத்தின் இலக்கு என்று சொல்லப்படுகிறது. கடந்த 2019 பிப்ரவரி மாதம் தொழில்முனைவோர் பாடமானது சில டெல்லி பள்ளிகளில் சோதனை முயற்சியாகக் கொண்டுவரப்பட்டது.

அப்போது மாணவர்கள் நிஜமான தொழில்முனைவோர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினர். அதன் மூலம் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவர்களுடைய சாதனைகள் குறித்த புரிதல் கிடைப்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு உருவாக்கப்பட்டது. இதில் 500 பள்ளிகளைச் சேர்ந்த 1.5 லட்சம் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அனைத்து டெல்லி பள்ளிகளிலும் தொழில்முனைவோர் பாடம் முழு வீச்சில் கற்பிக்கப்படவிருக்கிறது. இது குறித்து டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணிஷ் சிசோடியா கூறுகையில், “வேலையில்லாத் திண்டாட்டத்தையும் வேலை வாய்ப்பு சந்தையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் புதிய மாற்றங்களையும் எதிர்கொள்ள மாணவர்களை தயார்ப்படுத்துவதே தொழில் முனைவோர் பாடத்தின் முக்கிய குறிக்கோள். இதில் மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்க மாணவர்களுக்கு தலா ரூ.1000 ஊக்கத் தொகையாக வழங்க டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது” இவ்வாறு மணிஷ் சிசோடியா குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x