Last Updated : 05 Jan, 2020 06:39 PM

 

Published : 05 Jan 2020 06:39 PM
Last Updated : 05 Jan 2020 06:39 PM

பள்ளியில் நிராகரிப்பு; கடந்த காலமோ, எதிர்காலமோ அபாரமான நினைவுத்திறனால் அசத்தும் தமிழக இளைஞர்

இறைவன் யாரையும் திறமையின்றி படைக்கவில்லை. ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஒரு வித்தியாசமான, வியக்கும் திறமையை வைத்துதான் படைத்துள்ளார்.

அதிலும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகளுக்குக் கடவுள் தனது கருணையைக் அதிகமாக அள்ளிக் கொடுத்துள்ளர் என்றுதான் கூற வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த 19வயது ரோஹித்பரிதி ராமகிருஷ்ணன் அபாரமான திறமையைப் பார்த்தால் கடவுளின் கருணையைத் தவிர வேறு எதைக்குறிப்பிட முடியும்.

கடந்த காலமோ, எதிர்காலமோ எந்த ஆண்டின் தேதியையும் குறிப்பிட்டு அதன் கிழமையைக் கேட்டால் சில வினாடிகள் அதைச் சரியாக கண்டுபிடித்துக் கூறும் அபாரமான நினைவாற்றல் ரோஹித்பரிதி ராமகிருஷ்ணனுக்கு இருக்கிறது.
ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்கள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகின்றனர்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை என்பதால், இயல்பான குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ராமகிருஷ்ணனுக்குச் சேர்க்கை மறுக்கப்பட்டது. ஆனால் இன்று ராமகிருஷ்ணனின் திறமையைப் புகழாத மனிதர்கள் இல்லை.

உதாரணமாக, கடந்த 2009ம் ஆண்டு 9-ம் தேதி 9வது மாதம் துபாயில் மெட்ரோ தொடங்கப்பட்டது அன்றைய கிழமை என்ன என்று ராமகிருஷ்ணனிடம் நிருபர் கேட்டபோது. புதன்கிழமை என்று தனக்கே உரியப் புன்னகையுடன் தெளிவாகப் பதில் அளித்தார்.

2000-ம் ஆண்டு 10-வது மாதம் 27-ம் தேதி ராமகிருஷ்ணன் பிறந்தநாள் கொண்டாடிய நாள் என்ன என்று கேட்டால், சில வினாடிகளில் வெள்ளிக்கிழமை என்று தகவல் தெரிவிக்கிறது. இதுபோன்ற எந்த கேள்விகளையும் கிழமையுடன் தொடர்புப்படுத்திக் கேட்டால் ராமகிருஷ்ணன் அனாசயமாக பதில்அளித்து வியப்பை ஏற்படுத்துகிறார்.

அதுமட்டுமல்லாமல், தனது குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சிகள், தேதிகள், அவர்கள் பயன்படுத்தி வாகனத்தின் எண், வண்ணம், நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்கள் ரீலீஸான கிழமை என அனைத்தையும் மிகச்சரியாகக் கூறி அசத்துகிறார் ராமகிருஷ்ணன்.

ராமகிருஷ்ணன் பிறக்கும்போது எடைகுறைவாக ஒருகிலோ அளவில் இருந்ததால்,அவரை இன்குபேட்டரில் வைத்து சில மாதங்கள் வளர்க்கப்பட்டார்.அப்போதே அவருக்கு உயிர்காக்கும் வகையில் சில அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன.

ஆனால், ராமகிருஷ்ணன் வளர்ந்து 2 வயதான பின்புதான் அவர் சாதாரண குழந்தை இல்லை, ஆட்டி சிறப்புக் குழந்தை என்று பெற்றோருக்க தெரியவந்தது

இருப்பினும் நம்பிக்கையோடு வளரட்டும் என்ற நோக்கில் இயல்பான குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு ராமகிருஷ்ணனைக் கொண்டு சென்றபோது அவரை சேர்க்க பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது. அதன்பின் ஆட்டிசத்துக்கான சிறப்பு ஆசிரியர் மூலம் கல்வி கற்றுள்ளார் ராமகிருஷ்ணன்.

ராமகிருஷ்ணன் குறித்து அவரின் தாய் மாலினி மனந்திறந்து பேசுகையில், " என்னுடைய மகன் ரோஹித் ஒரு அதிசயக் குழந்தை. கடவுளின் குழந்தை. வழக்கமான பள்ளியில் படிக்க அவனை ஏற்க மறுத்தார்கள், ஆனால், இன்று அவனின் திறமையை கண்டு வியக்கிறார்கள்.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி ராமகிருஷ்ணனைச் சிறப்புப் பள்ளியில் சேர்த்தோம். அங்கு இவனின் திறமையை அடையாளம் காணப்பட்டது. தொலைக்காட்சி பார்த்தால் பாடல்களைக் கேட்டுக்கொண்டு ஹம்மிங் செய்வது போன்றவை இயல்பாக வந்தன. கணிதத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டபின், ராமகிருஷ்ணன் ஒருபோதம் தவறுகள் செய்ததில்லை.

ராமகிருஷ்ணனின் திறமையை வளர்க்கும் விதத்தில் துபாயில் உள்ள சிறப்புக் கல்வி மையத்தில் சேர்த்துப் படிக்கவைத்தேன். ராமகிருஷ்ணனுக்கு அங்குச் சிறப்பு ஆசிரியராக வந்த வீணா சிவக்குமார் அவனின் திறமையைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தினார், 2018-ம் ஆண்டு இந்திய அரசுக்கு உட்பட்ட திறந்தவெளி கல்வித்திட்டத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதித் தேறினான். ஐக்கிய அரபு அமீரக அரசின் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு அவருக்குத் தேவையான கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது

எலெக்ட்ரானிக் கீபோர்ட் வாசிக்கும் பயிற்சி எடுத்த ராமகிருஷ்ணன் அதில் நன்கு தேறிவிட்டார். எந்த இசையையும் இருமுறை கேட்டுவிட்டால் அதை அப்படியே தனது கீபோர்டில் இசையமைத்துவிடும் திறமையைப் பெற்றுவிட்டார்.

பகவத் கீதையில் வரும் சமஸ்கிருதத்தில் இருக்கும் 40 ஸ்லோகங்களையும் மனப்பாடமாக ராமகிருஷ்ணனால் கூற முடியும்.

2018-ம் ஆண்டு சிறப்பு ஒலிம்பிக்ஸ், 2019-ம் ஆண்டு சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை ராமகிருஷ்ணன் வென்றுள்ளார். ராமகிருஷ்ணன் ஏராளமான இடங்களில் கீபோர்ட்டு இசைக்க சென்று வருகிறார், அவரின் திறமையைப் பார்த்த ஏராளமான மக்கள் அவரை பல்வேறு இடங்களில் இசையமைக்க அழைத்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்

இதுபோன்ற அரிய பல திறமைகள் கொண்டிருக்கும், சாதித்துக் கொண்டிருக்கும் ராமகிருஷ்ணனுக்குத் தான் ஒருசாதனையாளர், பல விருதுகளை வென்றவர் என்பதை உணரமுடியாது என்பதுதான் வேதனையின் உச்சம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x