Last Updated : 04 Jan, 2020 02:14 PM

 

Published : 04 Jan 2020 02:14 PM
Last Updated : 04 Jan 2020 02:14 PM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டேப்லெட் கணினி வழங்கிய டெல்லி அரசு

அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்புக்காக டேப்லெட் கணினிகளை நேற்று டெல்லி அரசு வழங்கியது.

டெல்லி அரசுப் பள்ளிகளில் படித்து 10-ம் வகுப்பில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கும் ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா மாணவர்களுக்கும் இந்த கணினிகள் வழங்கப்படுகின்றன.

டேப்லெட் கணினிகளை டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணிஷ் சிசோடியா வழங்கினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ''மாநிலம் முழுவதும் தகுதிவாய்ந்த சுமார் 15 ஆயிரம் மாணவர்களுக்கு கணினிகள் வழங்கப்படும். இதன்மூலம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் திறமையானவர்களை மேலும் வளர்த்தெடுக்க முடியும். ஆய்வுகளை மாணவர்கள் மேற்கொள்ள முடியும்.

டெல்லி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேருக்கு டேப்லெட் வழங்கப்பட்ட பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டது. டெல்லியின் ஒட்டுமொத்தக் கல்வி முறையை மேம்படுத்த, அடித்தளத்தை உறுதியாக்க முடிவெடுத்தோம். இதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐஎம் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களில் ஆசிரியர்கள் பயிற்சி எடுத்தனர்.

தற்போது புத்திசாலி மாணவர்களுக்கு மட்டும் டேப்லெட் கணினி வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும். 'என் மகன்/மகள் கணினிக்கு அடிமையாகி விட்டனர்' என்றோ, 'நல்ல முறையில் படிக்கிறார்கள்' என்றோ உங்களின் பெற்றோர் சொல்லப்போவது மாணவர்களாகிய உங்களின் கைகளில்தான் இருக்கிறது.

நீங்கள் சரியான முறையில் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்'' என்று மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x