Last Updated : 03 Jan, 2020 12:59 PM

 

Published : 03 Jan 2020 12:59 PM
Last Updated : 03 Jan 2020 12:59 PM

'வனவிலங்குகள் போல் நடந்துகொள்ளும் மனிதர்கள்; ஒழுக்கக் கல்வி அறிமுகம்'- தெலங்கானா முதல்வர்

வனவிலங்குகள் போல் மனிதர்கள் நடந்துகொள்வதால், தெலங்கானா கல்வி நிறுவனங்களில் ஒழுக்கக் கல்வி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் டிஜிபியின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடும் நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்ட முதல்வர் சந்திரசேகர ராவ் இதுதொடர்பாகக் கூறியதாவது:

''சமூகத்தில் மனித மாண்புகளை உயர்த்தும் வகையில், கல்வி நிறுவனங்களில் ஒழுக்கக் கல்வி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

துரதிர்ஷ்டவசமாக தற்போதைய சமூகத்தில் குற்றச்செயல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சில நேரங்களில் மனிதர்கள் வனவிலங்குகள் போல நடந்து கொள்கின்றனர். இந்த மாதிரியான குற்றவியலைத் தடுக்க வேண்டிய உடனடித் தேவை நமக்கு இருக்கிறது.

கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு ஒழுக்கக் கல்வியை வழங்குவதன் மூலம் சமூகத்தில் அறநெறியை வளர்க்க முடியும். அடுத்த கல்வியாண்டில் இருந்து இக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும். இது தொடர்பாக அலசி, ஆராய முன்னாள் டிஜிபிக்களுடன் ஒரு குழு அமைக்கப்படும்.

ஜீயர் சுவாமி உள்ளிட்ட ஆன்மிகத் தலைவர்களிடம் இருந்து ஆலோசனைகளும் அறிவுரைகளும் பெறப்படும். சமூகத்தில் நல்லது நடக்க, சில கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில் தவறில்லை. பெரும்பான்மை சமூகத்தினர் பயன்பெறும் என்றால் கடுமையையும் பின்பற்றலாம்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தலித் சமூகத்தினர் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும்''.

இவ்வாறு முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x