Published : 02 Jan 2020 08:35 AM
Last Updated : 02 Jan 2020 08:35 AM

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

அண்ணா பல்கலைக்கழக உறுப்புகல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கடலூரைச் சேர்ந்த ஜி.அருட்பெருஞ்ஜோதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘அண்ணா பல்கலைக்கழக உறுப்புகல்லூரியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். ஏற்கெனவே நான் உட்பட 518 தற்காலிகஆசிரியர்கள், கடந்த 10 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றி வருகிறோம். எங்களை இன்னும் பணிநிரந்தரம் செய்யவில்லை.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் 13 உறுப்புக் கல்லூரிகளில் மீண்டும் 133 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் கடந்தடிச.19 அன்று அறிவிப்பு செய்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளின்படி பொறியியல் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் என்ற பணியிடமே கிடையாது. நிரந்தரப் பணியிடங்கள் எத்தனை உள்ளது என்ற எந்தவொரு கணக்கெடுப்பும் நடத்தப்படாமல் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், விருப்பம்போல் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்திருப்பது யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ விதிமுறைகளுக்கு எதிரானது.

எனவே, இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த டிச.19 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த அறிவிப்பை செயல்படுத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும்” எனகோரியிருந்தார்.

இந்த மனு, விடுமுறை கால அமர்வில் நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே நிரந்தர ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாகவும், எஞ்சிய அனைவரும் தற்காலிக ஆசிரியர்களே என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்புக்கு இடைக்காலத்தடை விதித்தும், இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம்பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x