Published : 02 Jan 2020 07:51 AM
Last Updated : 02 Jan 2020 07:51 AM

தேர்வுக்குத் தயாரா?- மதிப்பெண்களை வாரி வழங்கும் பாடம்: 10-ம் வகுப்பு சமூக அறிவியல்

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் பகுதியை முழுமையாகப் படித்தாலே 50 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை உறுதி செய்யலாம். சற்றே கூடுதல் கவனம் செலுத்தினால், மாணவரின் மதிப்பெண் கூடுதலை உயர்த்தவும் சமூக அறிவியல் உதவும்.

‘ஒரு மதிப்பெண்கள்’ குவிந்த வினாத்தாள்

பகுதி-1: ஒரு மதிப்பெண் பகுதியில் ‘சரியான விடையைத் தேர்வு’ செய்யும் 14 வினாக்கள் உள்ளன. இதில் 4 வரை உயர் சிந்தனைக்கான வினாக்களாக அமைந்திருக்கும்.

பகுதி-2: இரு மதிப்பெண்ணுக்கான 14 சிறுவினாக்களில் இருந்து 10-க்கு பதிலளிக்க வேண்டும். வரலாறு, புவியியலில் இருந்து தலா 4, குடிமையியல், மற்றும் பொருளாதாரத்தில் இருந்து தலா 2 என, வினாக்களின் எண்ணிக்கை அமைந்திருக்கும். அவற்றில் ஒன்று (வி.எண்.28) கட்டாய வினாவாகும். புவியியலில் இருந்தே இந்த கட்டாய வினா இடம்பெற வாய்ப்புள்ளது.

பகுதி-3: 5 மதிப்பெண்களுக்கான இப்பகுதியில் 13-ல் இருந்து எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 5 மதிப்பெண் பகுதி என்ற போதும், இவை 15 ஒரு மதிப்பெண் வினாக்களை உள்ளடக்கி இருக்கும். ஒரு வினா, ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவினாக்களின் தொகுப்பாகவும் இடம்பெறும். வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளாதாரத்தில் இருந்து தலா 2 ஐந்து மதிப்பெண் வினாக்கள் இடம்பெறும். மேலும் ஒரு வினா காலக்கோடு குறித்தும், வரலாறு வரைபடத்துக்கான (மேப்) வினா கட்டாய வினாவாகவும் (வி.எண்.42) அமைந்திருக்கும்.

பகுதி-4: எட்டு மதிப்பெண்களுக்கான இப்பகுதியில் ‘அல்லது’ வகையிலான 2 நெடுவினாக்கள் அமைந்திருக்கும். இவற்றில் ஒன்று (வி.எண்.44) புவியியல் வரைபட வினாவாகும்.

தேர்ச்சி நிச்சயம்

ஒரு மதிப்பெண் பகுதி மட்டுமல்லாமல் பகுதி-3-ல் இடம்பெறும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக, பொருத்துக’ வினாக்கள் மற்றும் ’காலக்கோடு, வரைபடம்’ ஆகியவற்றையும் சேர்த்து மொத்தம் 55 மதிப்பெண்களுக்கு ஒரு மதிப்பெண் வினாக்களாக அமைந்துள்ளன. எனவே, புத்தக வினாக்களை குறிவைத்து படித்தாலே ஒரு மதிப்பெண்கள் வாயிலாக தேர்ச்சியை உறுதி செய்ய முடியும். இவற்றுடன் எளிமையான இரு மதிப்பெண் வினாக்களையும், அவற்றை தொகுப்பாக இடம்பெறும் 5 மதிப்பெண் வினாவுக்கும் விடையளிப்பதன் மூலம்கூடுதல் மதிப்பெண்களையும் பெறலாம்.

அதிக மதிப்பெண்களுக்கு

ஒரு மதிப்பெண் பகுதியில் கேட்கவாய்ப்புள்ள உயர் சிந்தனைக்கான உருவாக்கப்பட்ட வினாக்களை, பாடநூலின் ‘தகவல் பேழை’, ‘உங்களுக்குத் தெரியுமா?’ ஆகியவற்றில் இருந்தும் பெறலாம்.

புவியியல் வரைபடத்துக்கு, ‘தீவுகள், கடல்கள், ஆறுகள், பீடபூமிகள் துறைமுகம், மண் வகைகள், கடற்கரைகள், மலைத்தொடர்கள், வளைகுடாக்கள், சிகரங்கள், இருப்புப்பாதை, விமான நிலையங்கள்’ ஆகியவற்றில் நன்கு பயிற்சி பெற வேண்டும். இந்திய வரைபடத்தில் கலவரங்கள், புரட்சிகள் நடந்த இடங்களை குறிப்பதில் மாணவர்கள் தவறிழைப்பதால், அவற்றில் போதிய பயிற்சி தேவை. குறிப்பாக ‘மீரட், லக்னோ, கான்பூர், ஜான்சி, குவாலியர், ஆக்ரா’ உள்ளிட்ட இடங்களை சரியாககுறிக்க பயிற்சி தேவை. வரலாறு மற்றும்குடிமையியலில் முதல் பாடங்கள், பொருளாதாரத்தின் 2-ம் பாடம் ஆகியவற்றிலிருந்து 6 சிறு வினாக்களை எதிர்பார்க்கலாம். வி.எண்.31-க்கு, புவியியலின் முதலிரு பாடங்களின் பொருத்துக வினாக்கள் முக்கியமானவை.

வரைபடங்களில் உரிய இடங்களை துல்லியமாக குறிப்பது அவசியம். நெடுவினா பகுதியில் ஓரிரு சுயமான கருத்துக்களை எழுதலாம். ஆனால் கதை எழுதிபக்கத்தை நிரப்புவது மதிப்பெண் தராது.சொந்தமாக எழுத விரும்பும் கருத்துக்களை ஆசிரியர் மேற்பார்வையில் மேம்படுத்திக்கொள்வது அதற்கான மதிப்பெண்களை உறுதி செய்ய உதவும்.

தேர்வு நேர மேலாண்மை

வினாத்தாளை வாசிப்பதற்கான காலஅவகாசத்தை பயன்படுத்தி, இருமுறையேனும் முழுமையாக வாசித்து புரிந்துகொள்வது தேர்வறை நேர மேலாண்மைக்கும், குழப்ப மின்றி விடையளிக்கவும் உதவும். நேர மேலாண்மையில் பகுதி வாரியாக அதிகபட்ச நேரத்தைபின்வருமாறு ஒதுக்கலாம். பகுதி-1: 20 நிமிடங்கள், பகுதி-2: 30 நிமிடங்கள், பகுதி-3: 70 நிமிடங்கள் (விரிவான வினாவுக்கு தலா 10 நிமிடம், ஒரு மதிப்பெண்ணுக்கு தலா 1 நிமிடம் உட்பட), பகுதி-4: 30 நிமிடங்கள். மிச்சமிருக்கும் அவகாசத்தில் 20 நிமிடங்களேனும் விடைத்தாள் சரிபார்ப்புக்கு ஒதுக்கலாம்.

காலக்கோட்டில் கவனம்

காலக்கோட்டில் ஆண்டுகள் மற்றும் அளவுகளை துல்லியமாக குறித்தால் முழு மதிப்பெண் கிடைக்கும். காலக்கோடுக்கான வினாவை முழுமையாக புரிந்து விடையளிப்பது நல்லது. ‘1900-1920 இடையிலான வரலாற்று நிகழ்வுகள்’ என்பதற்கும் ‘1900-1920 இடையிலான இந்திய வரலாற்று நிகழ்வுகள்’ என்பதற்கும் வேறுபாடு உண்டு.கவனக்குறைவால் இந்த வினாவில் தவறாக விடையளிக்கவும் வாய்ப்பாகிறது.

காலக்கோடு வினாவுக்கு (வி.எண்.41) ‘வங்காளப் பிரிவு, 2 உலகப்போர்கள், ஒத்துழையாமை இயக்கம், வட்டமேஜை மாநாடுகள், தேச விடுதலை முதல் குடியரசு வரை’ எனஆண்டுகள் மற்றும் நிகழ்வுகளின் வரிசையில் பயிற்சிபெறலாம். இதர நெடுவினாக்கள் பலவற்றையும் காலக்கோடு அடிப்படையில் படிப்பது, திருப்புதலில் எளிமையாக இருப்பதுடன் காலக்கோடு வினாவுக்கும் உதவும்.

- பாடக்குறிப்புகள் வழங்கியவர்:
மு.ஜலீல் முஹம்மது, பட்டதாரி ஆசிரியர் (வரலாறு), அரசு மேல்நிலைப் பள்ளி, புத்தாம்பூர், புதுக்கோட்டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x