Published : 01 Jan 2020 08:52 AM
Last Updated : 01 Jan 2020 08:52 AM

குரூப்-1 இறுதி தேர்வு முடிவுகளை ஒரே ஆண்டுக்குள் வெளியிட்டு சாதனை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பெருமிதம்

சென்னை

குரூப்-1 இறுதி தேர்வு முடிவுகளை ஒரே ஆண்டுக்குள் வெளியிட்டு சாதனை புரிந்திருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலர் கே.நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டிஎன்பிஎஸ்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து குரூப்-1 பணிகளில் மிக அதிக எண்ணிக்கையிலான 181 காலிப் பணியிடங்களுக்காக, அதிக தேர்வர்கள் பங்கேற்ற முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் முடிவுகளை, அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வெளியிட்டு தேர்வாணையம் சாதனை புரிந்துள்ளது.

அதிகப்படியான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு இத்தேர்வு முடிவுகள் மிக குறுகிய காலத்துக்குள் வெளியிடப்பட்டுள்ளன. அறிவிக்கை வெளியிடப்பட்ட ஒரு வருடத்துக்கு உள்ளாக அனைத்து நிலை தேர்வுகளையும் நடத்தி அதற்கான முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்திய அளவில், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் உட்பட எந்த மாநில தேர்வாணையமும், குருப்-1-க்கு இணையான பதவிகளுக்கான தெரிவினை ஓராண்டுக்குள் முடித்ததில்லை. இது தேர்வாணைய வரலாற்றில் ஒரு சாதனையாகும்.

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான (தொகுதி – 1 பணிகள்) 181 காலிப் பணியிடங்களுக்கான அறிவிக்கை 01.01.2019 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு தகுதியான 2,29,438 விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வு 03.03.2019 அன்று நடத்தப்பட்டு அதற்கான முடிவு ஒரே மாதத்தில், அதாவது 03.04.2019 அன்று வெளியிடப்பட்டது. முதனிலை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 9,442 விண்ணப்பதாரர்களுக்கு 12.07.2019, 13.07.2019 மற்றும் 14.07.2019 ஆகிய தேதிகளில் முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்வில் பங்கேற்ற 7,713 விண்ணப்பதாரர்களின் 23,139 விவரித்து எழுதும் விடைத்தாள்களும் விரைவாக மதிப்பீடு செய்யப்பட்டு முதன்மை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் நான்கு மாத காலத்துக்குள் 09.12.2019 அன்று வெளியிடப்பட்டன.

முதன்மை எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் 363 விண்ணப்பதாரர்களுக்கு மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியன 23.12.2019 முதல் 31.12.2019 வரை நடைபெற்றது. நேர்முகத்தேர்வு நடைபெற்ற இறுதி நாளான (31.12.2019) இன்றே, கலந்துகொண்ட தேர்வர்களின் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம் மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் குரூப்-1 பதவிகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 6 ஆம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். இதுகுறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தெரிவுக்கப்படுவதுடன் தேர்வாணையத்தின் இணைய தளத்திலும் வெளியிடப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x