Published : 31 Dec 2019 11:36 AM
Last Updated : 31 Dec 2019 11:36 AM

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்: விதிமுறைகள் வெளியீடு

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''மார்ச் 2020-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் 06.01.2020 (திங்கள்கிழமை) முதல் 13.01.2020 (திங்கள்கிழமை) வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் 2020 மற்றும் ஜூன் 2020 பருவங்களில்நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை பழைய பாடத்திட்டதிலேயே எழுதலாம்.

நேரடித் தனித் தேர்வர்கள் அனைவரும் பகுதி 1- ல் மொழிப்பாடத்தில் தமிழ்மொழிப் பாடத்தை மட்டுமே முதல் மொழிப்பாடமாக கண்டிப்பாகத் தேர்வெழுதுதல் வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தேர்வர்களின் நலன் கருதி தேர்வு நேரக்கால அளவானது 2 மணிநேரத்திலிருந்து 3 மணிநேரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இடைநிலைக் கல்வி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாடம் மற்றும் ஆங்கில மொழிப்பாடத்தில் இருந்து வந்த இரு தாள்களாக தேர்வெழுதும் நடைமுறைக்கு பதிலாக இப்பாடங்களுக்கு ஒரே தாளாக தேர்வு (100 மதிப்பெண்) நடத்தப்படும்.

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:

முதன் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் நேரடித் தனித்தேர்வர்கள்:


1. 01.03.2020 அன்று 14 வயது பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
2. மத்திய / மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ/மாணவியர்.
3. 9 ஆம் வகுப்பு வரை பயின்று இடையில் நின்ற மாணவ /மாணவியர்.
4. தேர்வுத் துறையால் நடத்தப்படும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள்.
5. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கல்வி காப்புறுதி திட்டத்தின் கீழ் பயின்று 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள்.
6. உண்டு உறைவிடப் பள்ளியில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள்.
7. திறந்த வெளிப் பள்ளியில் ஆங்கிலப் பாடத் தேர்ச்சியுடன் சி லெவல் சான்றிதழ் பெற்றவர்கள்.
8. 14 வயது பூர்த்தி செய்த உழைக்கும் சிறார் கல்வி திட்டத்தின் கீழ் தொழிலாளர் அமைச்சகம் இந்திய அரசின் கீழ் வழங்கப்பட்ட முறைசாரா கல்வி மாற்றுச்சான்றிதழ் பெற்றவர்கள்.

மேற்படி கல்வித்தகுதி பெற்ற தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கு ஏற்கெனவே பதிவு / பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.

ஏற்கெனவே தேர்வெழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்கள்:

1. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தால் நடத்தப்பட்ட திறந்தவெளிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களில் 01.03.2020 அன்று 14 வயது பூர்த்தியடைந்தவர்கள் திறந்தவெளி பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாத பாடங்களை மட்டும், தனித்தேர்வர்களாக அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்படும் மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்திற்கு வ.எண் 5-ல் குறிப்பிட்டுள்ள நடைமுறையினை கடைபிடிக்க வேண்டும்.

2. எஸ்.எஸ்.எல்.சி பழைய பாடத்திட்டத்தில் தோல்வியுற்றிருப்பின், தோல்வியுற்ற பாடங்களை மட்டும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்திற்கு வ.எண் 5-ல் குறிப்பிட்டுள்ள நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

3. (i) ஒ.எஸ்.எல்.சி பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தைத் தவிர ஏனைய பாடங்களில் தோல்வியுற்றிருப்பின், தோல்வியுற்ற பாடங்களை மட்டும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்திற்கு வ.எண் 5-ல் குறிப்பிட்டுள்ள நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

(ii) முதன்மை மொழிப் பாடத்தில் தமிழ் மொழி தவிர பிற மொழிப்பாடங்களில் தோல்வியுற்றிருப்பினும், அத்தேர்வர்களும் தமிழ்மொழிப் பாடத்தை மட்டுமே பகுதி 1-ல் தேர்வெழுதிட அனுமதிக்கப்படுவர்.

4. (i) மெட்ரிக் / ஆங்கிலோ இந்திய பழைய பாடத்திட்டத்தில் ஓரிரு பாடங்களில்கூட தோல்வியுற்றிருப்பினும், மேற்படி தேர்வர்கள் பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் ஒரேநேரத்தில் அனைத்துப் பாடங்களுக்கும் விண்ணப்பித்து (அறிவியல் செய்முறை மற்றும் கருத்தியல் உட்பட), அனைத்து பாடங்களையும் தேர்வெழுத வேண்டும்.

(ii) தமிழ் மற்றும் ஆங்கிலம் அல்லாத பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட தனித்தேர்வர்கள், அவர்கள் விருப்பப்படின் அவரவர் தாய்மொழியை பகுதி IV-ல் விருப்பப் பாடமாக எடுத்து ஒருதாள் கொண்ட தேர்வாக தேர்வெழுதலாம். பகுதி IV –ல் தேர்வெழுதியுள்ள மொழிப்பாடங்களில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. எனவே எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தேர்ச்சிக்கு பகுதி IV –ல் தேர்வெழுதியுள்ள அவரவர் மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.

(iii) தேர்வரின் கைவசம் உள்ள மெட்ரிக் / ஆங்கிலோ இந்திய அசல் மதிப்பெண் சான்றிதழை அரசுத் தேர்வு சேவை மையத்தில் சமர்ப்பித்துவிட்டு தற்போதுள்ள பாடத்திட்டத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்க வேண்டும்.

5. (i) அறிவியல் பாடத்தைப் பொறுத்தவரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பித்த பிறகே, அறிவியல் பாட கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பித்து, அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற்று, செய்முறைத் தேர்வு எழுதிய பின்பே அறிவியல் பாட கருத்தியல் தேர்வினை எழுத இயலும்.

2019 - 2020 ஆம் கல்வியாண்டு, மார்ச் 2020 பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிப்பதற்கு 06.06.2019 முதல் 29.06.2019 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மேற்படி தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தற்போது அறிவிக்கப்படும் தேதியில் பதிவு செய்து 06.01.2020 முதல் 13.01.2020 முடிய (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) உரிய பயிற்சி பெற்று, செய்முறைத் தேர்வெழுத வேண்டும்.

(ii) அறிவியல் பாடத்தை ஏற்கெனவே தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் செய்முறைத் தேர்வு/ கருத்தியல் என்ற இரு பகுதிகளில் எந்தப் பகுதியில் தோல்வியடைந்தாலும் தோல்வியுற்ற பகுதிக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்:
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்படுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களில் 06.01.2020 முதல் 13.01.2020 மாலை 5 மணிக்குள் (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) தங்களின் விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம்:
தேர்வுக் கட்டணம் ரூ. 125/-
ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ. 50/-
மொத்தம் ரூ. 175/-

பத்தாம் வகுப்புத் தேர்வினை எழுதும் தனித்தேர்வர்கள் ஒரு பாடத்திற்கு விண்ணப்பித்தாலும், 5 பாடங்களுக்கு விண்ணப்பித்தாலும் மேற்குறிப்பிட்டபடி ரூ.175/-ஐ தேர்வுக்கட்டணமாகச் செலுத்தவேண்டும்.
தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தினை பணமாகச் செலுத்த வேண்டும்.

மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கான அறிவுரை:
1. பார்வையற்றோர் / வாய்பேசாத மற்றும் காது கேளாதோருக்கு மேற்குறிப்பிட்ட தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

2. மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த அரசாணைகளை http://www.dge.tn.gov.in/ என்ற அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் காணலாம்.

3. அரசாணைகளில் குறிப்பிட்டுள்ள மாற்றுத் திறனாளிகள், டிஸ்லெக்சியா, நரம்பியல் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள், தேர்வெழுதும்போது சொல்வதை எழுதுபவர், தேர்வெழுத கூடுதல் நேரம் கோருதல் போன்ற அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளைப் பெற விரும்பினால், தங்களது விண்ணப்பத்துடன் தனியே சலுகை கோரும் கடிதத்தையும், உரிய மருத்துவச் சான்றிதழ்களை கட்டாயமாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப எண்ணின் முக்கியத்துவம் :
ஆன்லைனில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே அரசுத் தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால் ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்:

முதன் முறையாக விண்ணப்பிக்கும் நேரடித் தனித்தேர்வர்கள்

1. எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு படித்தமைக்கான அசல் மாற்றுச் சான்றிதழ்
2. எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்
3. அறிவியல் செய்முறைப் பயிற்சியில் கலந்து கொண்டமைக்கான பயிற்சி பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்பட்ட அத்தாட்சி சான்றிதழ் அசல் அல்லது செய்முறைப் பயிற்சி வகுப்பில் பெயர் பதிவு செய்ததற்கான விண்ணப்ப அத்தாட்சி சீட்டு.

மெட்ரிக்/ஆங்கிலோ இந்திய பாடத்திட்டத்தில் பயின்று தோல்வியுற்ற தேர்வர்கள்
1. மெட்ரிக்/ஆங்கிலோ இந்திய அசல் மதிப்பெண் சான்றிதழ்
2. அறிவியல் செய்முறைப் பயிற்சியில் கலந்து கொண்டமைக்கான பயிற்சி பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்பட்ட அத்தாட்சி சான்றிதழ் அசல் அல்லது செய்முறைப் பயிற்சி வகுப்பில் பெயர் பதிவு செய்ததற்கான விண்ணப்ப அத்தாட்சி சீட்டு.

ஏற்கெனவே தேர்வெழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்கள்
i ஏற்கெனவே தேர்வெழுதி தோல்வியுற்ற அனைத்துப் பருவங்களின் சான்றொப்பமிட்ட மதிப்பெண் சான்றிதழ் நகல்
ii அறிவியல் செய்முறைப் பயிற்சியில் கலந்து கொண்டமைக்கான பயிற்சி பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்பட்ட அத்தாட்சி சான்றிதழ் அசல்
அல்லது செய்முறைப் பயிற்சி வகுப்பில் பெயர் பதிவு செய்ததற்கான விண்ணப்ப அத்தாட்சி சீட்டு.

அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்தல்
ஏற்கெனவே இவ்வியக்ககத்தால் அறிவிக்கப்பட்ட தருணங்களில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேராமல் விடுபட்ட தனித்தேர்வர்கள் 06.01.2020 முதல் 13.01.2020 வரை தங்களது பெயரை அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் 20.01.202023மற்றும் 21.01.202019 வரையிலான தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், இத்தேர்வுகள் சார்ந்த தகவல்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்''.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x