Last Updated : 28 Dec, 2019 04:43 PM

 

Published : 28 Dec 2019 04:43 PM
Last Updated : 28 Dec 2019 04:43 PM

உலகின் மிகப் பிரபலமான இளம்பெண் மலாலா: ஐநா கவுரவிப்பு

பெண் கல்விக்காகப் போராடி வரும் மலாலாவை, உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண் என்று ஐநா சபை கவுரவித்துள்ளது.

பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயது சிறுமியாக இருந்த அவரை கடந்த 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயர் தப்பினார் மலாலா.

உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்தார் மலாலா. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமைக்கும் மலாலா சொந்தக்காரர் ஆனார்.

இந்நிலையில் தற்போது ஐநா சபை, கடந்த 10 ஆண்டுகளில் உலகிலேயே மிகவும் பிரபலமான பதின்பருவத்தினர் என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

இதுகுறித்து ஐநா சபை கூறும்போது, ’’மலாலாவின் போராட்டமும் பிறருக்கு உதவும் குணவும் அவரின் மீதான கொலை முயற்சிக்குப் பிறகு அதிகரித்தது. 2017-ல் அவர் ஐநாவின் அமைதிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக சிறப்பு கவனம் எடுத்து செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் உலகிலேயே மிகவும் பிரபலமான பதின்பருவத்தினர் என்று அறியப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, பிரபல பத்திரிகையான டீன் வாக், அவரை அட்டைப் படத்தில் வெளியிட்டு சிறப்பித்தது. கடந்த 10 ஆண்டுகளில் கல்விக்கான போராளியாக அவரை அடையாளப்படுத்துவதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x