Published : 28 Dec 2019 10:55 AM
Last Updated : 28 Dec 2019 10:55 AM

பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை ரத்தா?- பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

பிரதமரின் உரையைக் கேட்க பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பொங்கல் விடுமுறை ரத்தா என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

பரிக்ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 3-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

இதற்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். தேர்வுகள் குறித்தும் அதுசம்பந்தமான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழா ஜனவரி 16-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கிடையே பொங்கல் விடுமுறை தினத்தன்று (ஜன.16), பிரதமர் மோடி உரையைக் கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

மாணவர்கள் தூர்தர்ஷன் வாயிலாகவோ அல்லது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக யூடியூப் தளம் வாயிலாகவோ கட்டாயம், பிரதமரின் உரையைக் கேட்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்பட்டது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவர் மத்தியில் பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்படுமா என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ''அதன்படி பிரதமர் மோடியின் உரையை நேரில் காண, பள்ளி மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறவில்லை. பிரதமரின் உரையை மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம்.

பள்ளிக்கு வர மாணவர்களுக்கு விருப்பம் இருந்தால், அவர்களுக்கு தக்க ஏற்பாடு செய்யக் கோரி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் விடுமுறை ரத்து இல்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x