Published : 27 Dec 2019 08:33 AM
Last Updated : 27 Dec 2019 08:33 AM

உயர்கல்வி மாணவர்களுக்கான இளைஞர் நாடாளுமன்ற போட்டி- ஜன.31-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

தேசிய அளவிலான இளைஞர் நாடாளுமன்ற போட்டிக்கு உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலாளர் ரஜனிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

மத்திய அரசு சார்பில் 1996-ம் ஆண்டு முதல் ‘இளைஞர் நாடாளுமன்றம்’ போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களிடம் நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த புரிதலை வளர்க்கவும், அதுதொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளவும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதன்மூலம் மாணவர்கள் இடையே ஒழுக்கம், சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகளும் மேம்படும்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்றம் போட்டிக்கு விருப்பம் உள்ளவர்கள் மத்திய அரசின் http://nyps.mpa.gov.in/ இணையதளம் வழியாக ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அந்த இணையதளத்தில் போட்டி தொடர்பான கையேடு, வீடியோ, புகைப்படங்கள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் நிர்வாகங்களும் இளைஞர் நாடாளுமன்ற போட்டிக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x