Last Updated : 24 Dec, 2019 06:18 PM

 

Published : 24 Dec 2019 06:18 PM
Last Updated : 24 Dec 2019 06:18 PM

கோயில் திருவிழாவில் அலங்காரம் இல்லை, ஆடம்பரமில்லை: பள்ளிக்கூடத்துக்காக பணத்தை மிச்சப்படுத்தும் கிராம மக்கள்!

மதரீதியான பண்டிகைகளுக்கு ஆகும் செலவைக் குறைத்து, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பள்ளியை மேம்படுத்த மகாராஷ்டிராவில் உள்ள கிராமம் ஒன்று முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் பொக்ரி கிராமம் உள்ளது. இங்குள்ள கிராம மக்கள் ஏற்கெனவே அங்கன்வாடியையும் கணினி ஆய்வகத்தையும் தரம் உயர்த்தியுள்ளனர். அந்த வகையில் தற்போது ஜில்லா பரிஷத் பள்ளியையும் மேம்படுத்த முடிவு செய்துள்ளனர்.

தங்களின் மதரீதியான பண்டிகைகளுக்கு ஆகும் செலவைக் குறைத்து, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு இதற்கான தொகையை ஈடுசெய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜில்லா பரிஷத் சிஇஓ பவ்னீத் கவுர் கூறும்போது, ''கிராம மக்கள், ஊர்ப் பள்ளியை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்த முடிவு செய்துள்ளனர். இதற்கு நாங்களும் முழு மனதுடன் துணை நிற்போம். பள்ளிக்காக இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி, வளாகத்தைப் பெரிதுபடுத்தவும் கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.

இந்த முன்னெடுப்புக்குக் காரணமானவர்களில் ஒருவரான பாலாசாகேப் போசாலே, ''இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோயில் திருவிழா உள்ளிட்ட மதம் சார்ந்த திருவிழாக்களுக்கு ஆகும் செலவைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு வாரம் நடக்கும் 'பக்தாவ் சப்டா' என்னும் விழாவுக்குத் தேவைப்படும் இனிப்புகளையும், தங்குவதற்கான கூடாரங்களையும் குறைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் விழாக்களின்போது சப்பாத்திகளை ஒவ்வொரு தனிநபரும் கொண்டு வருவார். 'தால்' ஒரே இடத்தில் தயாரித்து விநியோகிக்கப்படும். இதில் மிச்சப்படுத்தும் பணத்தைக் கொண்டு, பள்ளியைத் தரம் உயர்த்துவோம்.

இதுவரை அங்கன்வாடி மற்றும் கணினி ஆய்வகத்துக்காக கிராம மக்கள், ரூ.10 லட்சம் அளித்துள்ளனர். எங்கள் கிராமத்தில் 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ளவர்கள் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் வழங்க உள்ளனர். அதைக்கொண்டு பள்ளிக் கட்டிடம் எழுப்பப்பட உள்ளது'' என்று பாலாசாகேப் போசாலே தெரிவித்தார்.

செய்தியைக் கேள்விப்பட்ட பக்கத்துக்கு கிராமத்தினர், பொக்ரி கிராமத்தைப் பின்பற்ற முடிவெடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x