Published : 24 Dec 2019 12:12 PM
Last Updated : 24 Dec 2019 12:12 PM

வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 2-ம் பருவத் தேர்வும், 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புக்கு அரையாண்டுத் தேர்வும் கடந்த டிச. 13-ம் தேதி முதல் டிச. 23-ம் தேதி வரை நடைபெற்றது. அதேபோல பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிச.11-ம் தேதி முதல் டிச. 23-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வுகளில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்திலும் ஒரே மாதிரியான வினாத்தாள் மட்டுமே இடம்பெற வேண்டுமென அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது. இதற்காக, அரசு தேர்வுத்துறை தமிழ் வழி, ஆங்கில வழி வினாத்தாளை ஒரே மாதிரியாக வடிவமைத்து, அச்சங்கங்களுக்கு நேரடியாக அனுப்பி வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டன.

அவை அந்தந்த மாவட்டங்களில் வினாத்தாள் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேர்வு நாளன்று பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில், பிளஸ் 2 வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவதாகப் புகார் எழுந்தன. சமூக வலைதளங்களில் வெளியான அதே வினாத்தாள்கள் அரையாண்டுத் தேர்வில் கொடுக்கப்பட்டதால் பிளஸ் 2 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும்போது, ''தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே வெளியான தகவல் கிடைத்தவுடன் வினாத்தாள்கள் மாற்றியமைக்கப்பட்டு விட்டன.

பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 72 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கவும் 7,200 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 750 பள்ளிகளில் ஆய்வகம் வழங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசவும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. அடுத்த வாரம் இதற்கான வகுப்புகள் தொடங்கும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x