Published : 21 Dec 2019 06:05 PM
Last Updated : 21 Dec 2019 06:05 PM

மாணவர்களிடையே நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் சமூக சிந்தனை விளையாட்டு: தானே உருவாக்கி இலவசமாக கற்றுத்தரும் மதுரை இளைஞர்

மதுரை

பள்ளி மாணவர்களிடையே சமூக சிந்தனைகள், நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் வகையில் ‘அஷ்யூடெய்’ (ASUDE) எனும் விளையாட்டு முறையை மதுரையைச் சேர்ந்த இளைஞர் உ.அப்துல்ரகுமான் உருவாக்கியுள்ளார்.

இந்த விளையாட்டினை அரசு பள்ளி மாணவர்களுக்கு அவர் இலவசமாகக் கற்றுத்தருகிறார்.

மதுரை காஜிமார் தெருவைச் சேர்ந்த உமர்கத்தாப் மகன் அப்துல்ரகுமான் (26). இவர் தியாகராஜர் கல்லூரியில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

இவர் பள்ளி மாணவர்கள், மற்றும் குழந்தைகளிடம் நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் வகையிலும், சமூக சிந்தனைகளைத் தூண்டும் வகையிலும் ‘அஷ்யூடெய்’ என்னும் விளையாட்டு முறையை உருவாக்கியுள்ளார்.

இந்த விளையாட்டு உருவாக்கம் குறித்து உ.அப்துல்ரகுமான் கூறியதாவது: நான் பள்ளிப் பருவத்தில் வேலை பார்த்துக்கொண்டே படித்தேன். ஏதாவது துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

ஆனால், எந்தத்துறையை எடுத்தாலும் அதில் போட்டி இருந்தது. தனியார் பள்ளியில் வேலை பார்த்தபோது வகுப்பறையில் மாணவர்கள் விளையாடிக் கொண்டே இருந்தனர். அதனைக்கண்டு படிப்பைவிட விளையாட்டை விரும்பும் மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் சமூக சிந்தனைகளை வளர்க்க வேண்டும் என நினைத்தேன்.

தற்போது மாணவர்கள் களத்திற்குச் சென்று விளையாடாமல் வீடியோகேம், செல்போனில் கேம் விளையாடுகின்றனர்.
அந்த விளையாட்டுகளில் எதிரிகளைச் சுடுவது, தாக்குவது, அழிப்பது போன்ற எதிர்மறை எண்ணங்களை வளர்க்கும் வகையிலேயே ‘விளையாட்டுகள்’ உள்ளன.

எனவே, நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் விளையாட்டுகளை உருவாக்க வேண்டும் என‘அஷ்யூடு’ என்ற சமூக சிந்தனை விளையாட்டை உருவாக்கியுள்ளேன். சதுரங்க விளையாட்டைப் போன்றுள்ள இந்த விளையாட்டுக்கு ஜப்பானிய மொழியில் ‘அஷ்யூடெய்’ ( ஏப்ரல் 22- புவி தினம்) என பெயர் வைத்துள்ளேன்.

தற்போது மனிதர்களால் இயற்கைச் சூழல் மாசு படுத்தப்படுகிறது. எனவே மாசின்றி இருக்கும் காடுகளை ஆக்கிரமிக்க மனிதன் காடுகளை அழிக்கிறான். இதனால் காட்டில் உள்ள விலங்குகள் இடம் பெயரத் தொடங்குகின்றன. காடுகளில் உள்ள மரங்கள் அழிப்பால் மழை வளமும் குறைந்து வருகின்றன.

இதுபோன்ற காரணங்களால் இறுதியில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் நடக்கும் மோதலில் இயற்கையை மீட்பது எப்படி என்பதை விளக்கும் வகையில் இந்த ‘அஷ்யூடு’ என்ற விளையாட்டை உருவாக்கியுள்ளேன்.

இந்த விளையாட்டை விளையாடும் மாணவர்களிடையே நேர்மறை எண்ணங்கள் வளர்கிறது. மற்ற விளையாட்டுகள் போல் இல்லாமல் இந்த விளையாட்டை நிபந்தனையின்றி விளையாடலாம்.

இதனை அறிந்த பல தனியார் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். அரசு பள்ளிமாணவர்களுக்கு இலவசமாக கற்றுத்தருகிறேன். இதன் மூலம் மாணவர்களிடையே நற்பண்புகள் வளர்க்கப்படுகின்றன. இதனை பாராட்டி சில அமைப்பினர் எனக்கு விருதும் வழங்கியுள்ளனர், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x