Last Updated : 20 Dec, 2019 05:03 PM

 

Published : 20 Dec 2019 05:03 PM
Last Updated : 20 Dec 2019 05:03 PM

புதுச்சேரியில் 23-வது புத்தகக் கண்காட்சி தொடங்கியது; மாணவர்களுக்கு சிறப்புப் போட்டிகள்

புதுச்சேரி

புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத்தின் சாா்பில் 23-வது தேசிய புத்தகக் கண்காட்சியை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு, புதுச்சேரி வள்ளலாா் சாலையில் உள்ள வேல். சொக்கநாதன் திருமண மண்டபத்தில் டிசம்பா் 20-ம் தேதி (இன்று) தொடங்கியது. வரும் 29-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 23-வது ஆண்டாக புத்தகக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. முதல்வர் நாராயணசாமி கண்காட்சியைத் தொடங்கி வைத்து புதிய நூல்களை வெளியிட்டார். முதல் நூலை அரசு கொறடா அனந்தராமன் பெற்றார்.

வீட்டுக்கு ஒரு நூலகம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இக்கண்காட்சியில் தமிழகம், கா்நாடகம், புதுச்சேரி, ஆந்திரம், மும்பை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூா், இலங்கை, மொரிஷியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் 'இந்து தமிழ் திசை ' உட்பட சுமாா் 100 புத்தக வெளியீடு மற்றும் விற்பனையாளா்களின் அரங்குகள் அமைந்துள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

இதில் நூல்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதிக புத்தகங்களை வாங்கும் வாசகா்களுக்கு புத்தக விரும்பி, புத்தக ராஜா, புத்தக ராணி, புத்தக மகாராஜா, புத்தக மகாராணி ஆகிய விருதுகளும், எழுத்தாளா்களுக்கும், புத்தக நிறுவனங்களுக்கும் புத்தக சேவா ரத்னா விருதுகளும் வழங்கப்பட உள்ளன. கண்காட்சியில் வெளிநாடு எழுத்தாளர்களின் 10 நூல்கள் இன்று வெளியிடப்பட்டன.

கண்காட்சியில் மாணவா்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு மாநில அளவிலான பேச்சு, கவிதை, கட்டுரை, பாட்டு, இசை, நடனம், வினாடி வினா, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்நிகழ்வில் புத்தக சங்கக் காப்பாளர் வேல்.சொ.இசைக்கலைவன், சங்கச் செயலர் கோதண்டபாணி, சங்கத்தலைவர் முத்து. முனைவர் பாஞ்.ராமலிங்கம், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x