Published : 18 Dec 2019 04:41 PM
Last Updated : 18 Dec 2019 04:41 PM

நொறுக்குத் தீனி, துரித உணவுகளில் அபாய அளவில் உப்பு, கொழுப்பு: மத்திய அரசு நிறுவனம் எச்சரிக்கை

கடைகளில் வாங்கப்படும் நொறுக்குத் தீனி, துரித உணவுகளில் அபாயத்தை ஏற்படுத்தும் அளவில் உப்பு, கொழுப்பு ஆகியவை இருப்பதாக, மத்திய அரசு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வகம் அண்மையில் ஆய்வொன்றை நடத்தியது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

''ஆய்வுக்காக சிப்ஸ், உடனடி நூடுல்ஸ், உடனடி சூப் உள்ளிட்ட 33 துரித உணவுகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதேபோல பீட்ஸா, பர்கர், பொரித்த சிக்கன், சாண்ட்விச் உள்ளிட்ட 19 பொருட்களின் மாதிரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் உள்ள உப்பு, கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன.

டெல்லியில் உள்ள துரித உணவகங்கள், மளிகைக் கடைகளில் இருந்து நாடு முழுவதும் அதிகம் விற்பனையாகும் உணவுப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் இருந்து அபாயத்தை ஏற்படுத்தும் அதிக அளவிலான உப்பு, கொழுப்பு ஆகியவை இருந்தது தெரியவந்தது. இது குழந்தைகளின் உடலில் ஆபத்தை ஏற்படுத்தும்''.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குநர் சுனிதா நரேன் கூறும்போது, ''உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தனது பணியை முறையாக மேற்கொள்வதில்லை. இதற்கு வலிமை வாய்ந்த உணவு நிறுவனங்கள் கொடுக்கும் அழுத்தமே காரணம். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பேக் செய்யப்பட்ட உணவுகளில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு நுகர்வோரின் கடமை'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x