Published : 18 Dec 2019 07:59 AM
Last Updated : 18 Dec 2019 07:59 AM

தேர்வுக்குத் தயாரா?- அதிக மதிப்பெண்களுக்கு அனைத்தையும் படிப்போம்- பிளஸ் 1 கணிதம்

தொகுப்பு எஸ்.எஸ்.லெனின்

பிளஸ் 1 கணிதத்தின் தொடர்ச்சியாகவே பிளஸ் 2 கணிதம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 கணிதத்தை முழுமையாகப் பயின்றால் மட்டுமே அதன் தொடர்ச்சியான பிளஸ் 2 கணிதத்தை கற்பது எளிதாக இருக்கும். மேலும் பிளஸ் 2-க்குப் பிறகு உயர்கல்விக்கும் பிளஸ் 1 கணிதமே அடிப்படையாகும்.

எனவே, தேர்வு தரும் மதிப்பெண்களுக்கு அப்பால், உயர்கல்விக்கும், அதற்கான நுழைவுத் தேர்வுகளுக்கும், பணிவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கும் பிளஸ் 1 கணிதம் மிகவும் அவசியம். மாணவர்கள் இதை மனதில் கொண்டு அதிக அக்கறையுடன் படிப்பது நல்லது.

உருவாக்கப்பட்ட வினாக்கள்

பகுதி-I, 20 ஒரு மதிப்பெண் வினாக்களுடன் அமைந்துள்ளது. இவற்றில் 5 அல்லது 6 வினாக்கள், உருவாக்கப்பட்ட வினாக்களாக இடம்பெற வாய்ப்புண்டு. 2 மதிப்பெண்களுக்கான பகுதி-II மற்றும் 3 மதிப்பெண்களுக்கான பகுதி-III ஆகியவற்றில், முறையே கொடுக்கப்பட்ட 10 வினாக்களில் இருந்து வையேனும் 7 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். பகுதி-IIல் வினா எண்.30, பகுதி-IIIல் வி.எ.40 ஆகியவை கட்டாய வினாக்கள் ஆகும். இந்த கட்டாய வினாக்கள் எந்தப் பாடத்திலிருந்தும் கேட்கப்படலாம் என்பதுடன் உருவாக்கப்பட்ட வினாவாக அமையவும் அதிக வாய்ப்புள்ளது. பகுதி-IV, 5 மதிப்பெண்களுக்கான ‘அல்லது, வகையிலான 7 வினாக்களுடன் இடம்பெறுகிறது.

வினாத்தாளின் 20 சதவீதம் வரை உருவாக்கப்பட்ட வினாக்களாக இடம்பெற வாய்ப்புள்ளது. இவை அனைத்து மதிப்பெண் பகுதிகளிலும் விரவலாக கேட்கப்படலாம். ஒரு மதிப்பெண் தவிர்த்த இதர வினா பகுதிகளில், சில பாடங்களின் வினாக்கள் விடுபட வாய்ப்புள்ளது. ஆனால், அவை எந்த பாடங்கள் என்ற திட்டவட்டம் இல்லாததால், அனைத்தையும் படிப்பது அவசியம்.

அதிக மதிப்பெண்களுக்கு

ப்ளூ பிரிண்ட் வழிகாட்டல் என்று எதுவும் தற்போது இல்லாததால், அதிக மதிப்பெண்களை இலக்காகக் கொண்ட மாணவர்கள் எந்தப் பாடத்தையும் ஒதுக்காது அனைத்தையும் கவனமாக படித்தாக வேண்டும். தேற்றங்களையும் தவிர்க்காமல் படிப்பது அவசியம். ஒவ்வொரு பாடத்திலும், பாடக்கருத்துகளின் அடிப்படைகளில் தேர்ந்த பிறகே கணக்குகளை தீர்த்து பழக வேண்டும். நுண்கணித பாடங்களான 9,10,11 ஆகியவற்றை நன்றாக படிக்கும் மாணவர்களும் தவிர்க்க முற்படுகிறார்கள். இப்பாடங்கள் பிளஸ் 2 மற்றும் உயர்கல்விக்கு அடிப்படை என்பதால் அவற்றை தவிர்க்கக் கூடாது.

கணக்குகளை வெறுமனே பார்த்து புரிந்துகொள்வது என்பதற்கு அப்பால், ஒவ்வொரு கணக்கையும் தீர்த்துப் பழகினால் மட்டுமே முழு மதிப்பெண்கள் பெற முடியும். ஒரு மதிப்பெண் பகுதியின் உள் வினாக்கள் மற்றும் உருவாக்கப்பட்ட வினாக்களை அடையாளம் கண்டு, அவற்றை தொகுத்துப் பயிற்சி மேற்கொள்வதும் அதிக மதிப்பெண்களுக்கு உதவும்.

தேர்ச்சி நிச்சயம்

கணிதம் கடினமானது என்ற எண்ணத்தை மாணவர்கள் கைவிட வேண்டும். புரிந்து படித்தால் எளிமை. பழகுவதுடன், சுவாரசியமாகவும் கணிதம் அமைந்திருக்கும். 2 தொகுதிகளின் 12 பாடங்களில் 2,6,7,8,12 ஆகிய 5 எளிமையான பாடங்களை குறிவைத்து படித்தாலே தேர்ச்சியை உறுதி செய்யலாம். சற்று கூடுதலான மதிப்பெண்களைப் பெற இவற்றுடன், இதர பாடங்களில் இருந்து பின்வரும் தலைப்பிலான பகுதிகளையும் படிக்க வேண்டும். முதல் பாடத்தில் ‘சமான தொடர்பு’ என்ற தலைப்பின் கீழான வினாக்கள், 4-வது பாடத்தில் ’கணித தொகுத்தறிதல்’, 5-ல் ‘ஈருறுப்பு தேற்றம்’, 11-ல் சூத்திரங்களை பயன்படுத்தும் வினாக்கள், 6-ல் ‘இரட்டை நேர்கோடுகள்’, 8-ல் தேற்றங்கள் ஆகியவை 5 மதிப்பெண் பகுதியில் மதிப்பெண்களை பெற உதவும். இவற்றுடன் ஒவ்வொரு பாடத்திலும் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களை வாரத்துக்கு ஒரு பாடமென திருப்புதலை திட்டமிட்டு செய்தாலே, அப்பகுதியின் 20 வினாக்களில் குறைந்தது 12-க்கு தயாராகலாம். இந்த வகையில் 90-க்கு30 முதல் 40 வரை மதிப்பெண்கள் உறுதிஆகும்.

கூடுதல் கவனக் குறிப்புகள்

கணிதத் தேர்வில் நேர மேலாண்மை மிகவும் முக்கியம். கணக்குகளை தொடர்ந்து தீர்த்துப் பழகுவதும், தவறுகளை சரிசெய்வதும் நேர மேலாண்மைக்கு உதவும். தேர்வின் நிறைவாக குறைந்தது 20 நிமிடங்களேனும் எழுதிய விடைத்தாளை சரிபார்க்க ஒதுக்குவது மதிப்பெண் சரிவை தவிர்க்கச் செய்யும். இந்த நேர மேலாண்மையை பள்ளித் தேர்வுகளில் இருந்தே பழகுவது, பொதுத்தேர்வில் வெகுவாய் கைகொடுக்கும்.

ஒரு மதிப்பெண் பகுதியில் வினா வரிசை, உரிய ஆப்ஷனை எடுத்து எழுதுவது ஆகியவற்றை சரிபார்ப்பது அவசியம். இவற்றில் தவறிழைப்பது, விடை சரியாக இருந்தும் மதிப்பெண்ணை இழக்க காரணமாகிவிடும்.

விடைக்கு உரிய அலகுகள் எழுதாதது, வினா எண் இட மறப்பது அல்லது மாற்றி எழுதுவது ஆகியவையும் மதிப்பெண் இழப்பை ஏற்பத்தும்.

உருவாக்கப்பட்ட வினாக்களும் கணிசமாக இடம்பெறும் என்பதால், அவற்றை எதிர்கொள்ள பாடம்தோறும் உள்ள சூத்திரங்கள், தேற்றங்கள் ஆகியவற்றை புரிந்துகொண்டு படிக்க வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் பயிற்சியில் உள்ள கணக்குகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்கள் எடுத்துக்காட்டு கணக்குகளையும் தீர்த்து பழகுவது அவசியம். இந்த இரண்டு பகுதியின் வினாக்களிலும் கணித தரவுகளை சற்றே மாற்றிக் கேட்க வாய்ப்புள்ளதையும் அறிந்துகொள்வதும் மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கும்.

விடைகளை ‘சாய்ஸ்’ அடிப்படையில் முன்னுரிமை தரும்போது, ‘நிரூபிக்க..’ வகையிலான வினாக்களை தெரிவு செய்து எழுதலாம். இவ்வகை வினாக்களில் வழக்கமான கணக்குகளின் விடைகள் தவறாகிப் போவது, கணிதப் பிழைகள் ஆகியவற்றுக்கு வாய்ப்பில்லை. அந்த வகையில் ‘நிரூபிக்க’ வினாக்கள் முழு மதிப்பெண்களை உறுதி செய்கின்றன.

- பாடக்குறிப்புகள் வழங்கிய
கணித முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்:
பொ.மணிகண்டன்,
எம்.பி.தெய்வசிகாமணி
அரசு மேல்நிலைப்பள்ளி, திங்களூர்,
ஈரோடு மாவட்டம்.
தி.பி.சுவாமிநாதன்,
மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலைப்பள்ளி, பல்லாவரம், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x