Published : 17 Dec 2019 11:13 AM
Last Updated : 17 Dec 2019 11:13 AM

உலகத் தமிழிசை தூதுவர் விருது: அரசுப்பள்ளி ஆசிரியருக்கு உலகத் தமிழ் இசை மாநாட்டில் வழங்கப்பட்டது

முதலாவது உலகத் தமிழ் இசை மாநாட்டில், அரசுப்பள்ளி ஆசிரியருக்கு உலகத் தமிழிசை தூதுவர் விருது வழங்கப்பட்டது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து முதலாவது உலகத் தமிழ் இசை மாநாட்டை மதுரையில் நடத்தின. 100 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அளவில் நடைபெறும் முதல் தமிழ் இசை மாநாடு என்பது இந்த மாநாட்டின் சிறப்பு. மூன்று இணை அமர்வுகளாக நடத்தப்பட்ட மாநாட்டில், ஒரு அரங்கத்தில் பன்னாட்டுத் தமிழிசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தினர். மதுரை இசைக் கல்லூரி குழுவினரின் இசைக் கச்சேரியோடு தொடங்கியது இசை அரங்கம்.

இன்னொரு அரங்கத்தில் பன்னாட்டு தமிழிசை ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அளித்தனர். 25 அமர்வுகளில் ஆய்வுக்கட்டுரைகள் அளிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள் 500-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பியிருந்தனர் அவற்றுள் மாநாட்டு அறிஞர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 250 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு1800 பக்கங்களில் நூல்களாக 3 தொகுதிகள் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன.

அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், சீனா, மொரிஷியஸ், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து தமிழ் இசைக் கலைஞர்களும் இசை ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் இசைத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கும், மாநாட்டுக்காகப் பல்வேறு வகையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், உலகத் தமிழிசை தூதுவர் என்னும் விருது அன்பாசிரியர் புகழேந்திக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்துப் பேசிய அவர், ''கானல் வரி கலை இலக்கியம் என்ற அமைப்பை நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறோம். இதில் தெருக்கூத்து, ஓவியம், சிற்பம் என தமிழர் கலைகள் சார்ந்த கருத்தரங்குகளை 3 ஆண்டுகளாக நடத்தி, கலைஞர்களுக்கு விருது வழங்கி வருகிறோம். இசை சார்ந்து 100 ஆண்டுகளாக எந்தவொரு பெரும் நிகழ்ச்சியும் நடக்காததால், இந்த ஆண்டு இசைக் கருத்தரங்கை நடத்தத் திட்டமிருந்தோம்.

இதுகுறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திடமும் பேசினோம். இதையடுத்து அந்நிறுவனமும் மதுரை தமிழ்ச் சங்கமும் இணைந்து இசை மாநாட்டை நடத்தத் திட்டமிட்டன. முதலாவது உலகத் தமிழ் இசை மாநாடு நடைபெறுவதற்கான தொடக்கப் புள்ளியாக நான் அமைந்ததாகக் கூறி, உலகத் தமிழிசை தூதுவர் என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் என் பெயரை மாநாட்டு குழுவினருக்குப் பரிந்துரைத்தார். இந்த விருதை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்.

மாநாட்டுத் தொடக்க விழாவில் முன்னிலை வகித்தும் ஆய்வரங்கத்தில் ஒரு அமர்வுக்கு தலைமை வகித்தும் "தமிழிசை பாட நூல்கள்" என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கியும் இந்த மாநாட்டில் பங்கேற்றேன்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x