Published : 17 Dec 2019 10:16 AM
Last Updated : 17 Dec 2019 10:16 AM

தோல்விகளில் பாடம் கற்றுக்கொண்டு வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்: மாணவர்களுக்கு அபிஷேக் பச்சன் அறிவுறுத்தல்

கோவை எஸ்.எஸ்.வி.எம். பள்ளியில் நேற்று மாணவிகளுடன் கலந்துரையாடிய பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன். படம்: ஜெ.மனோகரன்

கோவை

தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்றுமாணவர்களுக்கு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அறிவுறுத்தினார்.

கோவை வெள்ளலூர் எஸ்.எஸ்.வி.எம் சர்வதேச பள்ளியில் அபிஷேக் பச்சன் மற்றும் பிரபல கால்பந்து வீரர்கள் நேற்று மாணவர்களை சந்தித்து உரையாடினர். எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன் வரவேற்றார். நிர்வாக செயலர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். இதில் அபிஷேக் பச்சன் பேசியதாவது:

தற்போதைய மாணவர்கள் கல்வி, விளையாட்டு, ஒழுக்கத்தில் ஆர்வம் மிக்கவர்களாகவும், நேர்மறையான எண்ணங்கள் கொண்டவர்களாகவும் இருப்பது பாராட்டுக்குரியது. உடல் நலனில் அக்கறையுடன், உடற்பயிற்சி, விளையாட்டுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அது, சிறப்பான வளர்ச்சிக்கும், எதிர்காலத்துக்கும் நன்மைபயக்கும்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘இந்தியா கிரிக்கெட்டை நேசிக்கும் நாடு. இருப்பினும், தற்போது பிற விளையாட்டுகளும் வளர ஆரம்பித்துள்ளன. கபடி லீக், கைப்பந்து லீக், ஹாக்கி லீக், பாட்மிண்டன் லீக் என பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. கிரிக்கெட்டை தாண்டி பல விளையாட்டுகள் வளர்வது ஆரோக்கியமானது. நடிகராக இருப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. அரசியலில் எனக்கு விருப்பமில்லை’’ என்றார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சில மாணவர்கள் அபிஷேக்பச்சனிடம் முன்வைத்த கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள்:

ஒருபோதும் நாம் தோல்விகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த முறை வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும். நான் எப்போதும் தோல்விகளை, மனதை பாதிக்கும் அளவுக்கு கொண்டு செல்வதில்லை. எனது தந்தை அமிதாப்பச்சன் நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார் அதேபோல, எனது மகளுக்கு கற்றுத் தர வேண்டியது எனது கடமை.

பெரும்பாலும் எனது படங்கள் எனக்குப் பிடிக்காது. ஒவ்வொரு முறையும் எனது கதாபாத்திரத்தை வித்தியாசமான முறையில் செய்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x