Published : 16 Dec 2019 07:12 AM
Last Updated : 16 Dec 2019 07:12 AM

‘இந்து தமிழ்’ நாளிதழ் - ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி' இணைந்து நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சி: அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் ஊழலை ஒழிக்கலாம்; ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களிடம் சகாயம் உறுதி

அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் நேர்மையாக இருந்தால் ஊழலை ஒழிக்க முடியும் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக அரசின் அறிவியல் நகரம் துணைத் தலைவருமான உ.சகாயம் உறுதியாக கூறினார்.

‘இந்து தமிழ்’ நாளிதழ், சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்காக ‘ஆளப் பிறந்தோம்' என்ற போட்டித் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில், மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக அரசின் அறிவியல் நகரம் துணைத் தலைவருமான உ.சகாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:தமிழ்நாட்டில் இருந்து நிறைய இளைஞர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுவது பாராட்டுக்குரியது.

ஆழ்மனதில் விதையுங்கள்சமூக மாற்றங்களை மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் அல்ல மாணவர்களால்தான் உருவாக்க முடியும். பெரிய விருப்பம்தான் சாதனைகளுக்கு எல்லாம் அடிப்படை. அந்த வகையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற விதையை உங்கள் ஆழ்மனதில் விதையுங்கள். கடினமாக உழையுங்கள்.

ஐஏஎஸ் பதவி என்பது சமுதாயத்துக்கு பணியாற்ற மிகப் பெரிய வாய்ப்பு. மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் நொடிந்துபோன விவசாயிகளுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு என்று அனைத்து தரப்பினருக்கும் உதவி செய்ய முடியும். உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றினால் மக்கள் நம்மை அங்கீகரிப்பார்கள்.

இலக்கு - லட்சியம்ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று விரும்புவது இலக்கு. இது உங்களுக்கானது. ஆனால், நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாக இருக்க வேண்டும் என்று விரும்புவது லட்சியம். அது சமூகத்துக்கானது. எனவே, உங்களது இலக்கையும் லட்சியத்தையும் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் நேர்மையாக இருந்தால் ஊழலை ஒழிக்க முடியும்.

இவ்வாறு சகாயம் கூறினார்.

தொடர்ந்து ஐஏஎஸ் பணியின் தன்மைகள், அதிகாரங்கள் தொடர்பாக மாணவ - மாணவியர் எழுப்பிய கேள்விகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயமும், ஐஏஎஸ் தேர்வுக்கான தயாரிப்புகள் தொடர்பாக எழுப்பப்பட்ட வினாக்களுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமி முதுநிலை பேராசிரியர் சந்துருவும் விளக்கம் அளித்தனர்.

நிகழ்ச்சியை ‘இந்து தமிழ்’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், பெற்றோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ - மாணவியருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வு தொடர்பான வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

கடின உழைப்பால் ஐஏஎஸ் ஆகலாம்

சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி

15 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞரால் சென்னையில் தொடங்கப்பட்ட சங்கர் ஐஏஎஸ் அகாடமி இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை உருவாக்கியிருக்கிறது. கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இருந்தால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறலாம். ஐஏஎஸ் தேர்வு தயாரிப்புக்கு நாளிதழ்கள் வாசிப்பது மிகவும் முக்கியமானது. அது முதல்நிலைத் தேர்வு தொடங்கி நேர்முகத் தேர்வு வரை பயனுள்ளதாக இருக்கும். என்சிஈஆர்டி அறிவியல், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடப் புத்தகங்களும், மத்திய அரசின் இந்தியா இயர் புக் புத்தகமும் முதல்நிலைத் தேர்வுக்கு பேருதவியாக இருக்கும்.

மக்களுக்கு பணியாற்ற பல வாய்ப்புகள்

பொருளாதார நிபுணர் ஜெ.ஜெயரஞ்சன்:

இந்திய ஒன்றியத்தின் இரும்புச்சட்டங்களாக திகழ்பவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள். அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்களை செயல்படுத்தக் கூடிய அதிகாரம் அவர்கள் கையில் இருக்கிறது. மக்களின் மேம்பாட்டுக்கு பாடுபட இந்த பதவிகள் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன. மதிய உணவுத் திட்டம், சத்துணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டதுக்குப் பின்னால் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்.

அதிகாரப் பரவலாக்கல் குறித்த அறிவு

‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ்:

டெல்லியில் அல்ல; இந்தியாவின் அதிகாரம் அதன் ஆறு லட்சம் கிராமங்களுக்கும் பரவ வேண்டும் என்றார் தேசப்பிதா காந்தி. அதாவது, இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் டெல்லி ஆக வேண்டும் என்று அவர் விரும்பினார். முழுமையான கூட்டாட்சியில்தான் அது சாத்தியம். மத்திய அரசு, மாநில அரசு, உள்ளூர் அரசு என்று மூன்று அடுக்குகளுக்கும் அதிகாரம் முழுமையாகப் பகிரப்படும்போதுதான் அது சாத்தியம். நம்முடைய அரசமைப்பானது சமத்துவம் எனும் லட்சியத்தை அதன் ஆன்மாவில் கொண்டிருந்தாலும், இந்திய ஒன்றியமானது கூட்டாட்சி எனும் நரம்பால் கோக்கப்பட்டிருந்தாலும் அதிகாரங்கள் முழுமையாகப் பகிரப்படவில்லை. ஒற்றையாட்சி நாடான பிரிட்டனில் தலைநகர் லண்டன் காவல் துறை அதன் மேயர் கையில் இருக்கிறது; கூட்டாட்சியான இந்தியாவிலோ தலைநகர் டெல்லியின் காவல் துறை மத்திய அரசின் கையில் இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும் என்றால், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான அறிவு இங்கே பரவ வேண்டும். அப்படிப் பரவினால், உள்ளாட்சி பதவிகளை ஏலமிடும் அவலம் இங்கே நடக்காது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x