Published : 14 Dec 2019 02:47 PM
Last Updated : 14 Dec 2019 02:47 PM

சூழலைக் காக்க தினந்தோறும் குதிரையில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மணப்பாறை அருகே பள்ளி மாணவர்கள் இருவர், தினந்தோறும் குதிரையில் பள்ளிக்குச் செல்கின்றனர்.

மாறிவரும் நவீன உலகத்தில் போக்குவரத்து இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. நடைப்பயணம், சைக்கிள், ரிக்‌ஷா, இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார் என போக்குவரத்து பல பரிணாமங்ளை எடுத்துள்ளது. இதற்கான எரிபொருள் பயன்பாடு, இயற்கைச் சூழலுக்குக் கேடு விளைவிப்பதாக சூழியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இரண்டு பள்ளி மாணவர்கள் தினசரி, குதிரையில் பள்ளிக்குச் செல்கின்றனர். மணப்பாறை அருகே தேனூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். தனியார் வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றும் அவர், விலங்குகள் ஆர்வலர். குதிரைகள் குறித்துப் பேசும் பால சுப்பிரமணியன், ''5 குதிரைகளைச் சொந்தமாக வைத்து பராமரித்து வருகிறேன். 'நாட்டுக்குதிரை காப்போம்' என்ற குழுவைத் தொடங்கி நடத்தி வருகிறோம். அதில் தமிழகத்தைச் சேர்ந்த குதிரை வளர்ப்பவர்கள் அனைவரையும் சேர்த்து குதிரைகள் பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

நான் குதிரை வளர்ப்பதைப் பார்த்த அழகர்சாமி, வேலு என்னும் இரு மாணவர்கள் என்னிடம் வந்து குதிரைகள் பற்றித் தெரிந்துகொண்டனர். அவர்கள் இருவரும் தினந்தோறும் குதிரையில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்'' என்கிறார்.

குட்டிக் குதிரையில் தனித்தனியாக இருவரும் லாவகமாக ஏறி அமர்ந்து பயணிக்கின்றனர். மாணவர்கள் இருவரும் குதிரையில் செல்வதை மற்ற மாணவர்களும் ஆர்வத்துடன் பார்க்கின்றனர். தாங்களும் குதிரையில் செல்ல விருப்பம் தெரிவிக்கின்றனர்.

''அழிவின் விளிம்பில் உள்ள குதிரை இனங்களைக் காப்பாற்றவும் சூழலைப் பாதுகாக்கவும் குதிரைப் பயணம் உதவியாக இருக்கும்'' என்கிறார் பால சுப்பிரமணியன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x