Published : 14 Dec 2019 07:53 AM
Last Updated : 14 Dec 2019 07:53 AM

ஜனவரி முதல் மண்டல வாரியாக வேலைவாய்ப்பு முகாம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் சார்பில் மண்டலவாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் ஜனவரி முதல் நடத்தப்பட உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகத்தில் 82 வகையான இளநிலை, முதுநிலை படிப்புகள் உள்ளன. இவற்றில் 34,027 மாண வர்கள் படிக்கின்றனர். இதற் கிடையே திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் படிப்பவர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற குற்றச் சாட்டு நிலவுகிறது. இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்காக பிரத்யேக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திறந்தநிலை பல்கலைக் கழகம் முடிவு செய்தது.

அதன்படி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உடன் இணைந்து கடந்த நவம்பர் மாதம் சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் டிவிஎஸ், எஸ்பிஐ வங்கி உட்பட 40 முன்னணி நிறுவனங்கள் பங் கேற்றன. 400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து மண்டலவாரியாக வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த திறந்தநிலை பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி கூறிய தாவது:

திறந்தநிலை பல்கலைக்கழ கத்தில் வழங்கப்படும் 82 முதுநிலை, இளநிலை பாடப்பிரிவுகளும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளுக்கு தகுதி யானவைகள்தான். தேசிய அளவில் தமிழகம்தான் அதிக அளவிலான தொலைநிலை, திறந்தநிலை படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) அனுமதி பெற்றுள்ளது. அதனால்தான் நடப்பு கல்வி ஆண்டில் 16,873 பேர் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.

பல்கலை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சென்னை, மதுரை, திருச்சி உட்பட 7 மண் டல மையங்களில் ஜனவரி முதல் பல்வேறு முன்னணி நிறுவனங் களைக் கொண்டு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பல்கலைக் கழக இணையதளத்தில் (http://www.tnou.ac.in) முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

அதேநேரம் பிற பல்கலைக்கழ கங்களில் படித்த மாணவர்களும் முன்பதிவு செய்து முகாமில் பங் கேற்கலாம். ஆனால், திறந்தநிலை பல்கலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த முகாம்கள் வழியாக 3 ஆயிரம் பேர் வரை வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதுதவிர தற்போது படித்துவரும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற ஏதுவாக தொழிற்துறை நிறுவனங்களுடன் இணைந்து ‘கூட்டிணைவு மையம்’ அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x