Published : 12 Dec 2019 05:02 PM
Last Updated : 12 Dec 2019 05:02 PM

பள்ளிக் குழந்தைகளின் பஸ் பயணம்; பதைபதைப்பில் பெற்றோர்: விபத்தில்லாப் பயணத்துக்கு என்ன வழி?

கோப்புப் படம், உயிரிழந்த சிறுவன் சரண்

காலையில் சீக்கிரமே எழுந்து, மகன் சரணுக்குப் பிடித்த உணவைச் சமைத்துக் கொடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்த தாய் அந்த அதிர்ச்சியான செய்தியை எதிர்பார்த்திருக்க மாட்டார்.

சென்னை, வேளச்சேரியில் இருந்து மாம்பலம் நோக்கி நேற்று காலை மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து தி.நகர் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தபோது படிக்கட்டுகளில் நின்ற மாணவர்கள் ஒவ்வொருவராகக் கீழே குதித்தனர். அப்போது அவர்களுடன் குதித்த 12 வயது பள்ளி மாணவர் சரண் தவறி விழுந்தார். விழுந்த வேகத்தில் அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கியதில், உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆயிரமாயிரம் கனவுகளுடன் மகனைப் பள்ளிக்கு அனுப்பி வைத்த பெற்றோரால் எப்படி இந்தத் துயரத்தை எதிர்கொள்ள முடியும்? பள்ளிக்குச் செல்லும் போதே, பேருந்துச் சக்கரம் ஏறி உயிரை விட்ட சரண் போல ஏராளமான மாணவர்கள் படிக்கட்டில் பயணித்து, பெற்றோரையும் காண்போரையும் பதைபதைப்பில் ஆழ்த்திக்கொண்டேதான் இருக்கின்றனர்.

இதற்கு என்ன காரணம்? விபத்தில்லாப் பயணத்துக்கு என்ன வழி?

கீதா, அரசுப் பள்ளி ஆசிரியை, குமிழி:
''பெற்றோர்கள் வீட்டுக்கு அருகில் நல்ல பள்ளிகள் இல்லை என்று நினைக்கின்றனர். தூரமாக இருந்தாலும் தலைசிறந்த பள்ளிகளுக்கே தனது குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்றும் நினைக்கின்றனர். இதனால் அருகமைப் பள்ளிகள் என்ற தத்துவமே அடிபட்டுப் போகிறது. ஒரே பள்ளியை நோக்கி நிறையப் பேர் படையெடுக்கின்றனர். பெற்றோரின் மனநிலை முதலில் மாற வேண்டும்.

இந்தக் கால மாணவர்கள் ஒருவித சாகச மனநிலையுடனேயே வாழ்கின்றனர். பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் சொல்வதைப் பெரும்பாலானோர் காது கொடுத்துக் கேட்பதில்லை. அவர்களின் குழந்தைப் பருவத்தில் இருந்தே நீதிக்கதைகளைச் சொல்லி வளர்க்க வேண்டும். சமூக வாழ்வியல் சார்ந்த விழிப்புணர்வு வகுப்புகள் கற்பிக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்களின் பொறுப்பு

ஆசிரியர்கள் பாடம் எடுப்பது மட்டுமே தங்களின் கடமை என்று நினைத்துவிடக் கூடாது. மாணவர்களின் நடத்தை மாற்றத்தையும் ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும்.

ஆசிரியர் - பெற்றோர் இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும். மாதத்துக்கு ஒரு முறை அல்லது 2 மாதங்களுக்கு ஒருமுறை என பெற்றோர் சந்திப்புக் கூட்டங்களை நடத்த வேண்டும். தாங்கள் கவனிக்கப்படுகிறோம் என்பது மாணவர்கள் மனதில் ஒழுக்கத்தைத் தூண்டும்.

பெற்றோர்கள், குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். எந்தவித இடையூறும் இல்லாமல், குறைந்தது அரை மணிநேரம் அர்ப்பணிப்புடன் குழந்தைகளுடன் பேச/ விளையாட/ கதை சொல்லச் செலவிடலாம். அரசு குழந்தைகள் தினத்தன்று செய்யச் சொன்னதை ஆண்டுதோறும் செய்யலாம். மொத்தத்தில் ஆசிரியர்- பெற்றோர்- மாணவர் உறவு முக்கோணத் தகவல் பரிமாற்றத்துடன் இருக்க வேண்டும்'' என்கிறார் ஆசிரியர் கீதா.

சமூக ஆர்வலர் மெட்டில்டா இதுகுறித்து மேலும் சில பரிமாணங்களை எடுத்துக் கூறுகிறார்.
''நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை, பொருளாதாரச் சூழல் ஆகியவற்றால் பெரும்பாலான பெற்றோர்கள், பேருந்துகளிலேயே தங்களின் குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனர். பேருந்துகளின் பற்றாக்குறை, வாகன நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் அரசுப் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன.

எனினும் பெரும்பாலான நேரங்களில் தன்னை நாயகனாகக் காட்டவும் ஹீரோயிசத்தை நிலைநிறுத்தவும் இடம் இருந்தாலும் மாணவர்களே படிக்கட்டில் பயணிக்கின்றனர். ஹார்மோன் மாற்றங்களால் சக மாணவிகள், நண்பர்கள் முன்னிலையில் தன்னைப் பெரிய ஆளாக முன்னிறுத்தவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்'' என்றார்.

எப்படித் தவிர்க்கலாம்?

மேலும் அவர் கூறுகையில், ''ஓர் உயிரின் மதிப்பு குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளிடம் பேச வேண்டும். உயிரின் அருமை, அதுகுறித்த முக்கியத்துவம் பற்றி அறியாமலேயே மாணவர்கள் வளர்கின்றனர். விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பெற்றோர்கள், குழந்தைகளிடம் எடுத்துக் கூற வேண்டும். பெற்றோர் - குழந்தை உறவு ஒளிவு மறைவில்லாமல் இருக்க வேண்டும்'' என்கிறார் மெட்டில்டா.

போக்குவரத்துத் துறையின் பொறுப்பு குறித்து அதன் உயரதிகாரிகளிடம் பேசினேன். அவர்கள் கூறும்போது, ''சென்னையில் மட்டும் அரசுப் பேருந்துகளில் தினந்தோறும் 32 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பள்ளிகளில் விழிப்புணர்வுக் கையேடுகளை வழங்குகிறோம். குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

பள்ளி மாணவர்களையும் இதில் ஈடுபடுத்த மாணவர் மன்றங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பொதுவாக தனியாகப் பேருந்தில் பயணிக்கும் மாணவன் எந்தத் தவறையும் செய்வதில்லை. நண்பர்களுடன் பயணிக்கும்போது உற்சாக மிகுதியால் படிக்கட்டுகளில் பயணிப்பது, ஓடும் பேருந்தில் ஏறுவது/ இறங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

அரசுத் தரப்பில் இருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் முறையாக படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்களுக்கு, எச்சரிக்கை செய்யப்படும். மீறிப் பயணித்தால் பேருந்துகளில் இருந்து இறக்கி விடப்படுவர். தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால் வண்டி நேரடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்குச் செல்லும். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.

எனினும் பெற்றோர்கள் வந்து கோரிக்கை விடுப்பதால் அவற்றை வாபஸ் பெற்றுவிடுகிறோம். பெற்றவர்களும் பள்ளிகளும் கூடுதல் பொறுப்புணர்வை மாணவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்'' என்கின்றனர்.

மகளிர் பேருந்தைப் போல மாணவர்களுக்காக தனிப் பேருந்து விடும் திட்டம் அரசுத் தரப்பில் இருக்கிறதா? என்று கேட்டதற்கு, ''அரசுப் போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம் ஆகியவை நட்டத்தில் இயங்கினாலும் பொதுச் சேவையாற்றி வருகின்றன. அதனால் இப்போதைக்கு அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. எனினும் புதிதாக இயங்கி வரும் அனைத்துப் பேருந்துகளிலும் தானியங்கிக் கதவு பொருத்தப்பட்டுள்ளது. கதவை மூடினால் மட்டுமே பேருந்து நகரும். இனி வருங்காலத்திலும் அத்தகையே பேருந்துகளே வாங்கப்படும்'' என்றனர்.

மாணவர்கள் தனியாகச் செல்லும்போது அமைதியாகவும் கூட்டமாகச் செல்லும்போது ஆரவாரத்துடனும் நடந்துகொள்வது ஏன்? உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமனிடம் பேசினேன்.

''பதின்ம வயதுக்கே உரிய த்ரில் உணர்வாலும் மாணவிகள் மத்தியில் ஹீரோ என்று காண்பிக்கவும் நண்பர்கள் முன்னிலையில் 'தான் ஒரு லீடர்' என்று தெரியப்படுத்தவுமே மாணவர்கள் ஆபத்தான விஷயங்களைக் கூட அநாயசமாகக் கையாள்கின்றனர். குழுவாக இருக்கும்போது இது தாறுமாறாகிறது. சவாலை ஏற்பது, குழுவில் இருப்பவர் செய்பவரை தானும் செய்வது ஆகியவையும் காரணமாக அமைகிறது.

படிக்கட்டுகளில் பயணிப்பது, இருசக்கர வாகனத்தில் விரைந்து செல்வது உள்ளிட்ட த்ரில் தரும் விஷயங்கள் அவர்களை அதிகம் கவர்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் கார்டெக்ஸ். மூளையில் முன்பகுதியில் உள்ள கார்டெக்ஸ், அறிவுபூர்வமாக ஒரு விஷயத்தைப் பகுத்தறிந்து செயல்பட வைக்கும். நடுமூளையில் இருக்கும் அமிக்டலா, உணர்வுகளுக்குப் பொறுப்பானது. அது உடனடியாக அனைத்து உணர்வுகளையும் தூண்டி விடும்.

அமிக்டலாவுக்கும் கார்டெக்ஸுக்கும் இடையேயான தொடர்பு பதின்ம வயதில் முழுமையாக இருக்காது. கார்டெக்ஸின் வளர்ச்சியும் முறையாக இருக்காது. (25 வயதில்தான் கார்டெக்ஸ் முழு வளர்ச்சியடையும்). இதனாலேயே டீனேஜ் சிறுவர்கள் பயமறியாமல் செயல்படுகின்றனர். த்ரில் உணர்வு தொடங்கி காதல் வரை எல்லா உணர்வுகளும் அவர்களுக்கு மேலோங்கி நிற்கின்றன.

ஆசிரியை கீதா, சமூக ஆர்வலர் மெட்டில்டா, உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன்

என்ன செய்ய வேண்டும்?
இந்த வயதில் நாம் சொல்லும் எதுவும் மாணவர்கள் மனதில் ஏறாது. சிறு வயதில் இருந்தே பெற்றோர், நல்லது கெட்டதைக் கற்றுத் தர வேண்டும். படிப்பு, பாடம், மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை பெற்றோர் உணர வேண்டும். விளையாட்டு, நடனம் என மற்ற கலைகளையும் சொல்லித் தந்து வளர்க்க வேண்டும். தொடர்ந்து மாணவர்கள் இயங்கிக்கொண்டே இருக்கும்போது தேவையில்லாத உணர்ச்சிகளுக்கு இடமிருக்காது.

குழு மனப்பான்மை பள்ளியில்தான் உருவாகிறது என்பதால் பள்ளிகளும் மாணவர்களை சரியாகக் கையாள வேண்டும். பள்ளிகளில் மாணவர் நடப்பதே குதிப்பது போலத் தெரியும். ஆசிரியர்கள் அதை உணர்ந்து செயல்படப் பயிற்சி அளிக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர் சந்திப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களுக்கு அறிவுரை சொல்லக்கூடாது. ஆனால் ஓர் உறுதியைக் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். 'விபத்து செய்தியைப் படித்தேன். அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து உனக்குப் புரிகிறதா, இதுபோல் நீ செய்யாமல் இருப்பாயா?' என்று கேட்கலாம். 'பஸ் படில நின்னேன்னா, அவ்ளோதான்! தொலைச்சிருவேன்' என்றால் அவர்கள் காதிலேயே ஏறாது.

அடுத்ததாக அவர்களின் நண்பர்கள் குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். திருட்டு, பொய் சொல்வது தவறு. விதிகளை மதிக்க வேண்டும் என்று குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும்'' என்கிறார் உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன்.

படிப்புக்காக தினசரிப் பயணம் செய்யும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை, அனைவரும் சேர்ந்து உறுதி செய்ய வேண்டும். காலை நேரத்தில் பள்ளிகள் அதிகமுள்ள பகுதிகளில் போதிய பேருந்துகள் இயங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். பெற்றோர், ஆசிரியர், மாணவர், அரசு என அனைவரின் கூட்டு முயற்சியால் மட்டுமே உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x