Last Updated : 11 Dec, 2019 03:47 PM

 

Published : 11 Dec 2019 03:47 PM
Last Updated : 11 Dec 2019 03:47 PM

பள்ளி நேரத்தைக் கடந்து நடக்கும் அரையாண்டு தேர்வு; மலை கிராம மாணவர்கள் வீடு திரும்புவதில் சிக்கல்- நேரத்தைக் குறைக்க கோரிக்கை

தேனி

பள்ளி நேரத்தைக் கடந்து மாலை 5.15மணிக்கு அரையாண்டு தேர்வு முடியும் வகையில் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

மாலை 5.15மணிக்கு அரையாண்டு தேர்வை முடித்தால் மலைகிராம மாணவர்கள் வீடு திரும்புவதில் சிரமம் ஏற்படும். எனவே தேர்வு நேரத்தை குறைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு வரும் 13-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் உஷாராணி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன்படி ஒவ்வொரு அறைக்கும் 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் பிரிக்க வேண்டும். மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு எண் வழங்கி அதன்படியே தேர்வு நடத்தவேண்டும்.

10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரை தேர்வு நேரம் முடியும் வரை எழுத அறிவுறுத்த வேண்டும். அரைமணிநேரத்திற்கு ஒருமுறை மணி ஒலிக்கச் செய்வதுடன் கடைசி 5 நிமிடத்திற்கு எச்சரிக்கை மணி அடிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

காலையில் தேர்வு 10 முதல் 1.15வரையும், பிற்பகல் தேர்வு 2 முதல் 5.15 மணி வரையும் நடைபெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு முதல் அனைத்து பாடங்களும் தலா 100 மதிப்பெண்ணாக மாற்றம் செ்யப்பட்டுள்ளது. இதற்கு 3 மணி நேரம் என்பது அதிகம்.

பள்ளிநேரத்தை கணக்கிட்டே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் 5.15 மணி வரை தேர்வு நடைபெற்றால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே தேர்வு நேரத்தை குறைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் மு.முருகேசன் கூறுகையில், பாடங்களுக்கு முழு மதிப்பெண் 100என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதிலும் செய்முறைத்தேர்வு மதிப்பெண் தவிர்த்து 75 மதிப்பெண்ணிற்கே தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு 3 மணி நேரம் என்பது அதிகம். மாலை 5.15மணிக்கு தேர்வு முடிந்ததும் மலைப்பகுதி மாணவர்கள் வீடுதிரும்புவதில் சிக்கல் ஏற்படும். எனவே தேர்வு நேரத்தை மதிப்பெண்ணிற்கு ஏற்ப குறைக்க வேண்டும் என்றார்.

வழக்கமாக பள்ளிகள் மாலை 4.15 மணியுடன் நிறைவடையும் அதையும் கடந்து அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x