Published : 11 Dec 2019 02:44 PM
Last Updated : 11 Dec 2019 02:44 PM

கர்நாடக பாடப் புத்தகங்களில் திப்பு சுல்தான் பகுதியை நீக்க வேண்டுமா?- நிபுணர் குழு அறிக்கை

பாடப் புத்தகங்களில் திப்பு சுல்தான் குறித்த பகுதியை நீக்க வேண்டுமா என்பது குறித்து கர்நாடகாவில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மடிக்கெரி எம்எல்ஏவும் பாஜக தலைவருமான அப்பச்சு ரஞ்சன், கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் மற்றும் முதல்வர் எடியூரப்பாவிடம் திப்பு சுல்தான் குறித்த பாடங்கள், பள்ளிப் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதுதொடர்பாகக் கடிதமொன்றை எழுதிய அவர், ''திப்பு ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகச் சித்தரிக்கப்பட்டார். ஆனால் வரலாறு, தவறான தகவல்களுடன் எழுதப்படக் கூடாது. மக்களை தனது மதத்துக்கு மதமாற்றம் செய்யவே திப்பு சுல்தான் இங்கு வந்தார். தன்னுடைய ஆட்சிப் பரப்பை அதிகரிக்கவும் அவர் முயன்றார். திப்புவுக்குக் கன்னட மொழி மீது எந்த மரியாதையும் இல்லை. அவரின் நிர்வாக மொழி பெர்ஷியனாக இருந்தது.

அவர், மடிக்கெரி என்ற ஊரை ஜஃபராபாத் என்றும் மங்களூருவை ஜலாலாபாத் என்றும் பெயர் மாற்றம் செய்தார். இந்துக் கோயில்களைக் கொள்ளையடித்தார். கிறிஸ்தவ தேவாலயங்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. குடகில், 30 ஆயிரம் குடவர்கள் அவரால் மத மாற்றம் செய்யப்பட்டனர்'' என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து திப்பு சுல்தான் குறித்து ஆராய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அதில், துறைசார் வல்லுநர்கள் இல்லையென சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து, கல்வியாளர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு மேற்கொண்டு கர்நாடக பாடப்புத்தகக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில் திப்பு சுல்தான் குறித்து பாடப் புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ''திப்புவின் அறிமுகம் இல்லாமல், மைசூருவின் வரலாற்றைக் கற்பிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று'' என்று வல்லுநர்கள் குழுவினர் தங்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். எம்எல்ஏ அப்பச்சு ரஞ்சன் சமர்ப்பித்த ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 6, 7 மற்றும் 10-ம் வகுப்புப் பாடத் திட்டத்தில் திப்பு சுல்தான் குறித்த பாடங்கள் நீக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x