Published : 11 Dec 2019 01:05 PM
Last Updated : 11 Dec 2019 01:05 PM

குழந்தைகளுடன் உரையாடுவோம்: 2- வாசிப்பு என்னும் கயிறு அவசியம்

கல்வி - படிப்பு, தேர்ச்சி, மதிப்பெண்களுக்கானது மட்டுமில்லை. சுகாதாரம், தற்காப்பு, சுய ஒழுக்கம், மனிதநேயம், அழகியல் சார்ந்த கலைகளையும் கற்பிப்பதாக இருக்கவேண்டும். இவை அனைத்திலும் இருந்து இன்றைய கல்வி மெல்ல நழுவிச் சென்றுகொண்டே இருக்கிறது. அதை மீட்டெடுக்க முயற்சிக்கும் புதிய தொடர் இது!

மாணவர்களிடம் வாசிப்பை ஆழமாக ஊன்றுவோம். புரிதல் சார்ந்த அறிவு அவர்களுக்குள் விருட்சமாகும். இந்த சமூகத்தைக் காக்க அதுவே ஒரே வழி .

அதுவொரு பெரிய பள்ளி. அங்கு ஒரே ஒரு வகுப்பறை மட்டும் எப்போதும் வேறுபட்டு இருக்கும். இயல்பாக இருப்பதாலேயே மற்றவர் பார்வையில் வேறுபட்டு இருந்தது அந்த வகுப்பறை. ஆனால் பள்ளியின் மொத்தக் குழந்தைகளுக்கும் அந்த வகுப்பறையைக் கடந்து செல்லும்போது திரும்பிப் பார்ப்பது பிடிக்கும்.

அப்படிக் கடந்து செல்லும்போது உள்ளே இருக்கும் அந்த ஆசிரியரை, குழந்தைகள் தங்களது மலர்ச்சியான புன்னகையுடனோ அல்லது குட் மார்னிங் மிஸ், என்ற வார்த்தைகளுடனோதான் கடந்து செல்வார்கள். அல்லது மிக சுதந்திரமாக உள்ளே வந்து அந்த ஆசிரியரை நலம் விசாரித்துதான் செல்வார்கள். இவற்றுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கியக் காரணம் அந்த வகுப்பறையின் குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அந்த ஆசிரியர் அதற்கான சூழலை உருவாக்கியிருந்தார்.

ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறைகள்தான் பொதுவாக மகிழ்ச்சியாக இருக்கும். ஆசிரியர் உள்ள வகுப்பறைகள் எப்போதும் அமைதி காக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். இது நமக்குத் தெரியும். ஆனால், அந்த வகுப்பறை உயிரோட்டமாக, உளவியல் சிக்கல்களை அறுத்து எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியாகவே இருக்கும். அதே நேரம் மற்றவர் பார்வையில் கூச்சல் போடும் வகுப்பறையாகவே தோன்றும்.

தேர்வுக்குத் தயாராவது, பாடங்களைப் படிப்பது மட்டுமே அந்த வகுப்பறையில் நிகழாது. மாறாக ஒவ்வொருவர் புத்தகப் பையிலும் ஒன்றோ இரண்டோ கதைப் புத்தகங்கள் இருக்கும். ஆசிரியர் இல்லாதபோது ஒவ்வொரு குழந்தையும் ஒரு வேலை செய்யும். ஒரு குழந்தை தும்பி கதைப் புத்தகம் படிக்கும். ஒரு குழந்தை பஞ்சு மிட்டாய் படிக்கும்.

புரியாத குட்டி இளவரசன்

நான்கு பேர் கொண்ட குழு, க்ரியா தமிழ் அகராதியைப் புரட்டி குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும். இருவர் அணி ஒன்று ஆங்கில அகராதியைப் புரட்டிக் கொண்டு பொருள் கண்டுபிடிப்பதில் முனைப்புடன் இருக்கும். கடைசி பெஞ்ச்சில் இருவர், உலக மொழி பெயர்ப்பு சிறுவர் கதைப் புத்தகம் ஒன்றை வாசித்து அது குறித்து விவாதித்துக் கொண்டிருப்பார்கள். கீழே அமர்ந்து இருவர் குட்டி இளவரசனை ரசித்து, எனக்குப் புரியலடி எனக் கூறி சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். இன்னும் இருவர் படித்த புத்தகம் குறித்து நூலக நோட்டில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு இருப்பார்கள்.

சிலர் தாங்களே கதை எழுதிக் கொண்டு இருப்பார்கள். வகுப்பின் வலது ஓரத்தில் ஒரு உடைந்து போன மர அலமாரி திறந்த கதவுகளைத் தாங்கி நிற்கும். அதற்குள் 50-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதன் மேலே சுவரில் வகுப்பறை நூலகம் என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டை ஒட்டப்பட்டிருக்கும். அதனருகே வகுப்பின் நூலகப் பதிவேட்டை தனது கையில் வைத்துக் கொண்டு நூலகர் பொறுப்பு ஏற்றுள்ள ஒரு மாணவி அமர்ந்து இருப்பார். யாருக்கு என்ன புத்தகம் வேண்டும்? எனக் கேட்டு கையெழுத்துப் பெற்றுக் கொண்டு புத்தகம் வழங்குவார். 'புத்தகங்கள் இன்னும் தேவை மிஸ், நாளை எடுத்து வாங்க' என்பதையும் நினைவு படுத்துவார்.

நான் எழுதிய கதையை படித்துப் பார்க்க வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கும் சிறுமிகள் சிலர், ஆசிரியரிடம் அடம்பிடிக்கும் காட்சிகளும் இடம்பெறும். அதில் இருவர் படக்கதைகளை வரைந்தும் நோட்டைக் காண்பிக்கக் கூடும். இதிலெல்லாம் தன்னை இணைத்துக் கொள்ளாமல் தனியே அமர்ந்து படம் வரைவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு குழந்தையையும் காணலாம் . ஆனால் மேற்சொன்ன யாருக்கும் அந்த வகுப்பு ஆசிரியரிடமிருந்து எந்த விதக் கட்டுப்பாடும் கிடையாது.

இயல்புதான் வேறுபடுகிறது

ஆசிரியர் அல்லாத நேரம் மட்டுமல்ல... பல நேரங்களில் அந்த வகுப்பறையில் வகுப்பு ஆசிரியர் இருக்கும் போதும் இதுதான் நடைமுறை. ஆனால் அந்த வகுப்புக் குழந்தைகளை, உங்க வகுப்பு அடங்கவே மாட்டேங்குது என குற்றம் சொல்லும் ஆசிரியர்களையும் அங்கு காணலாம். ஏனெனில் இயல்பாக இருப்பதுதான் இங்கு வேறுபடுகிறது.

முதல் பருவம் முடிந்த தருவாயில் அந்த வகுப்பின் தமிழாசிரியர், வகுப்பாசிரியரிடம் உரையாடுகிறார். இந்த ஏழாம் வகுப்புக் குழந்தைகள் தமிழ்த் தேர்வை மிக நன்றாக எழுதியிருக்கின்றனர். பத்தாம் வகுப்பு மாணவிகளை விட இவர்கள் வாசிப்புத் திறன் சிறப்பாக உள்ளது மிஸ். சொற்களின் பொருள் அறியும் திறன், புரிதல் திறன் இரண்டுமே விரைவாக இருக்கிறது என்கிறார். தாங்களே சொந்தமாக எழுதவும் நிறையத் தெரிகிறது, இந்த பேட்ச் (Batch) பத்தாம் வகுப்பு வரும் போது நமக்கு ரிசல்ட்டுக்கு கவலையே இல்லை என அவரது பாணியில் கூறிச் செல்வது இங்கே ஒரு ஆவணமாகப் பார்க்கலாம். இதேபோல் ஆங்கிலமும் ,கணக்குத் தேர்வுகளும் கூட ஓரளவு நம்பிக்கைக்குரிய விளைவுகளையே தந்திருந்தன.

இவையெல்லாம் ஒரே நாளில் நடந்து விடவில்லை. ஒன்றரை வருடங்களின் விளைவு. சில கூறுகளை மனதில் கொள்ள வேண்டும். ஒரு வகுப்பறையில் மிக முக்கியத் தேவையாக மாணவர்களுக்காக வாசிப்புக்கான சூழலை உருவாக்க வேண்டும். அவர்களிடம் புத்தக வாசிப்பின் விருப்பத்தை அவர்களுக்குத் தெரியாமலேயே உருவாக்க ஆசிரியர் சற்று மெனக்கெட வேண்டும். வகுப்பறை வாசிப்புக்கு , வீட்டு வாசிப்புக்கு என நேரத்தை ஒதுக்கக் கற்றுத் தர வேண்டும்.

வாசிப்பு குறித்து நெறிப்படுத்துங்கள்

வாசிப்பின் சுவையை பல விதங்களில் அவர்களிடம் பரவலாக்க வேண்டும். அதோடு அவர்களை வாசிப்பு குறித்து நெறிப்படுத்த வேண்டும். படித்த புத்தகங்கள் குறித்து வகுப்பறையில் பகிர வைக்க, புத்தகம் எழுதிய ஆசிரியர் பற்றி பேச வைக்க, தங்கள் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை அந்த வாசிப்புடன் ஒப்பிட என, தொடர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் வாசிப்பு அதற்கான வினையை அவர்களது கற்றலிலும் அடுத்த கட்டமாக அவர்களது வாழ்க்கையிலும் வெளிப்படுத்தும்.

பார்த்தல் அதிகமாகி புத்தகப் படிப்பு குறைந்து போன காலகட்டமான இந்த சமூகச் சூழலில் மாணவரிடம் உளவியல் சார்ந்து பல சிக்கல்கள் உருவாகி வருகின்றன. அவை வீட்டிலும் பள்ளியிலும் வெவ்வேறு கோணங்களில் வெளிப்படுவதையும் கவனிக்க முடிகிறது. இவற்றுக்கு அடிப்படை என்னவென்றால் அவர்கள் மனதோடு பேச பெற்றோரோ ஆசிரியரோ நேரம் தராததுதான். பாடப் புத்தகங்கள் தவிர்த்து வாசிப்பிற்கான புத்தகங்கள் மட்டுமே குழந்தைகளின் மனதோடு பேசும் ஒற்றை நபராகி விடுகின்றன.

பெற்றோருக்கு வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்காக பொருள் தேடும் பணியே பிரதானம். ஆசிரியர்களுக்கோ சிலபஸ் முடித்து மாணவர்களைத் தேர்வுக்குத் தயாராக வைக்கும் பொறுப்பே முக்கியம். இந்த இடைவெளிகளில் ஏறக்குறைய 12 வருட காலங்கள் முழுவதும் குழந்தைகள் இந்த இரண்டு தரப்பினரிடையே சிக்கி தங்களது குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியற்றதாகவும் பொருளற்றதாகவும் கழித்து வருவதே அதிகமாக உள்ளது. இவற்றை மாற்றுவதற்கான சிறு முயற்சிதான் இந்த உத்தி என்றுகூட சொல்லலாம்.

நூலக வாசிப்பு அமையுமா?

ஓரளவு விழிப்புணர்வுடைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பு அனுபவத்தை வீட்டில் ஏற்படுத்தித் தர முற்பட்டு வருகின்றனர். ஆனால் சுமார் 90% பள்ளிக் குழந்தைகளுக்கு வீட்டில் இந்த சூழல் அமைவதில்லை. இதனால் பள்ளியே முழுப் பொறுப்பேற்று, அனைவருக்குமான நூலக வாசிப்பைத் தர வேண்டும். ஆனால் பள்ளிகள், தேர்வுக்கும் தேர்ச்சி விகிதத்திற்கும் முக்கியத்துவம் தருவதால் வாசிப்பை மிக எளிதாகப் புறம் தள்ளுகின்றன.

இதற்கான காரணங்களை ஆராய்ந்து, தீர்வுகளை நோக்கி நகர்வது ஒரு புறம் நடக்க வேண்டும். என்றாலும் குழந்தைகளுக்கான நிகழ்கால வாசிப்பு அனுபவத்தை அவரவர் பள்ளிகளில் உடனடியாக உருவாக்குவதுதான் இன்றைய அவசியமான, அவசரமான தேவையாகும். அப்போதுதான் இந்த சமூகத்தில் மாற்றம் மெல்ல மலரும்.

ஓர் ஏழாம் வகுப்பு மாணவியின் மனதில் டாக்டர் முத்துலட்சுமி குறித்த வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய வாசிப்பு பெரிய நம்பிக்கையைத் தருகிறது . தனது மனதோடு உரையாடும் மாணவி, பேச்சுப் போட்டியில் என்னைக் கவர்ந்த பெண் ஆளுமை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி எனப் பேசுகிறார். பாடப் புத்தகம் தாண்டி அந்த மாணவியின் முழுமையான வளர்ச்சிக்கு ஒரு நூல் வாசிப்பு எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளி வகுப்பறைகளில் பரவலான வாசிப்பு அனுபவத்தைத் தருவது மிக முக்கியக் கூறு என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். மெல்ல நழுவுகின்ற கல்வியை இறுக்கிப் பிடிக்க வாசிப்பு என்ற கயிறு அவசியம்.

உமா மகேஸ்வரி, ஆசிரியர் - தொடர்புக்கு: uma2015scert@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x