Published : 11 Dec 2019 08:46 AM
Last Updated : 11 Dec 2019 08:46 AM

தேர்வுக்குத் தயாரா?- வேதியியலில் மதிப்பெண் குவிப்பது எளிது!: பிளஸ் 1 வேதியியல்

தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்

தேர்வு எழுதுவதற்கான தாராள கால அவகாசம், மனப்பாடம் செய்வதை விட புரிந்துகொள்வதற்கே முன்னுரிமை, பல பக்கங்களில் பத்திகளாக எழுதுவதைவிட பாயிண்டுகளாக எழுதினால் போதும்.. என மாணவர்களுக்கு உகந்த மாற்றங்களை புதிய வினாத்தாள் மாதிரி கொண்டுள்ளது. அதற்கேற்ப படிக்கவும், விடையளிக்கவும் பழகிய மாணவர்களுக்கு வேதியியல் பாடத்தில் மதிப்பெண் குவிப்பது எளிதாகும்.

வினாத்தாள் அமைப்புபகுதி-1: ஒரு மதிப்பெண் பகுதி,‘சரியான விடையை எடுத்து எழுதுவதற்கான 15 வினாக்களுடன் அமைந் துள்ளது.

பகுதி-2: இரு மதிப்பெண் பகுதி, கொடுக்கப்பட்ட 9 வினாக்களில் இருந்து6-க்கு பதில் அளிப்பதாக உள்ளது.

பகுதி-3: மூன்று மதிப்பெண்களுக்கான இப்பகுதியும், கொடுக்கப்பட்ட 9-லிருந்து 6-க்கு பதிலளிப்பதாக இருக்கும். 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களில் தலா 1 வினா கட்டாய வினாவாக இடம்பெறும்.

பகுதி-4: ஐந்து மதிப்பெண்களுக்கான இப்பகுதியில், ‘அல்லது’ வகையிலான 5 வினாக்கள் இடம்பெற்றுள்ளன.

படைப்பு வினாக்களில் பயிற்சி

ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, பாடங்களின் பின்பகுதியில் உள்ள வினாக்களை முழுமையாக படித்து எழுதிப் பார்ப்பதன் மூலம் தயாராகலாம். அது தவிர்த்து கணிசமான ஒரு மதிப்பெண் வினாக்கள் உயர் சிந்தனைக்கான படைப்பு வினாக்களாகவும் இடம்பெறும். பாடங்களின் உட்கருத்துக்களை புரிந்துஉள்வாங்குவதன் மூலமும், அவற்றை முறையாக திருப்புதல் செய்வதன் மூலமாகவும், இந்த படைப்பு வினாக்களை எதிர்கொள்ளலாம். நூற்றுக்கு நூறு மற்றும் அதிக மதிப்பெண்களை இலக்காகக் கொண்ட மாணவர்களுக்கு, இந்த படைப்பு வினாக்களே சவாலாக இருப்பதால் அவற்றில் போதிய பயிற்சி அவசியம்.

தேர்ச்சி நிச்சயம்

வேதியியல் பாடத்தில் தேர்ச்சியை ‘உறுதி செய்ய, தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு, ஹைட்ரஜன், கார மற்றும் காரமண் உலோகங்கள், வாயுநிலைமை, இயற்சமநிலை மற்றும் வேதிச்சமநிலை, கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துகள், சுற்றுச்சூழல் வேதியியல்’ ஆகிய பாடங்களை முழுமையாக படித்தால் போதும். அதிகளவிலான சமன்பாடுகள் மற்றும் கணக்கீடுகள் இப்பாடங்களில் இல்லை. மேலும் கருத்தியல் பகுதிகளை அதிகம் கொண்ட இவை, மெல்லக்கற்கும் மாணவர்களும் படிப்பதற்குஎளிமையானவை. இப்பாடங்களின்சிறு மற்றும் குறுவினாக்களில் தொடர்ந்துபயில்வதுடன், எழுதிப்பார்த்து திருப்புதல் மேற்கொள்வதன் மூலம் தேர்ச்சியை உறுதி செய்யலாம். இவற்றுடன் ஒரு மதிப்பெண் பகுதியில், பாடங்களின் பின்னுள்ள வினாக்களை படித்தே 8 வினாக்கள் வரை எளிதில் விடையளிக்கலாம். இவ்வாறு மொத்தமதிப்பெண்ணான 70-ல் 25 மதிப்பெண்கள் உறுதி செய்யலாம்.

அதிக மதிப்பெண்களுக்கு

அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள், அனைத்துப் பாடங்களின் பின்னுள்ள வினாக்களுடன், பாடங்களினுள் பொதிந்துள்ள பாடக் கருத்துகளையும் புரிந்து படிப்பது அவசியம். வேதியியலில் மனப்பாடம் செய்யும் முறை, மதிப்பெண் உயர்வுக்கு உதவாது.

சமன்பாடுகள், கணக்கீடுகள் போன்றவை பயன்பாட்டு அடிப்படையிலான வினாக்களாகவே கேட்கப்படும். இவற்றுக்கான கணிதவியல் சூத்திரம் மட்டுமே மாணவர்கள் அறிந்திருப்பார்கள். தேர்வில் கேட்டிருக்கும் பயன்பாட்டு வினாக்களில் இந்த சூத்திரங்களை பொருத்தி, விடையளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

கரிம வேதியியலை பொறுத்தவரை நேரடி சமன்பாடுகளாக அல்லது வினைவழிமுறைகளை உள்ளடக்கி பதிலளிப்பதற்கான வினாக்களாக கேட்கப்படுகின்றன. எ.கா: ‘நீக்க வினைகள், பதிலீட்டு வினைகள்’.

ஒரு மதிப்பெண் வினாக்களில் 4 முதல் 5 வினாக்கள் கடினமாக இருக்கலாம். பாடக்கருத்துக்களை பயன்பாடு சார்ந்து வெளிப்படுத்துவதற்கான பயிற்சி மூலம்,இந்த வினாக்களுக்கும் உரிய விடையளிக்க முடியும். கடினமாக தோன்றும் ஒரு மதிப்பெண் வினாக்கள் நேரத்தை அதிகம் விழுங்கும் என்பதால், அவற்றை தேர்வின் நிறைவாக யோசித்து விடையளிப்பது நல்லது.

எழுதி பார்ப்பது நல்லது

கட்டாய வினாக்கள் எப்பாடத்திலிருந்தும் கேட்கப்படலாம். ‘கணக்குகள், சமன்பாடுகள்’ மட்டுமன்றி, ‘காரணம் கூறு,நிரூபி’ வகையிலான வினாக்களும் இதில் இடம்பெற வாய்ப்பு உண்டு.

பொதுவாக வேதியியல் பாடங்கள் படிப்பதற்கு அப்போதைக்கு எளிமையாக இருப்பினும், அவை மனதில் தங்காதுமறந்துவிடுவதாக அதிகம் குறைபட்டுக்கொள்வர்கள். எனவே படிப்பதுடன், எழுதிப் பார்ப்பதையும் வழக்கமாக கொள்ள வேண்டும். குறிப்பாக கரிம வேதியியல் பாடங்களில் அதிக சமன்பாடுகள் இருப்பதால், அங்கு எழுதி பார்த்தல் மூலம் மட்டுமே படிப்பதை முழுமையாக்க முடியும்.

பத்தி வாரியாக பதிலளிப்பதை தவிர்த்து, ‘பாயிண்டு’களின் வரிசையாக பதில் எழுதுவது உரிய மதிப்பெண்களை உறுதி செய்ய உதவும். சொந்த மொழி நடையில் எழுத விரும்பும் மாணவர்கள், மையக் கருத்திலிருந்து விலகாது எழுதி பழகுவதும் அவசியம்.

குறிப்பிட்ட வினாவுக்கான விடையை படித்துச் செல்லும் மாணவர்கள், தேர்வில் அந்த வினாவை சற்றே மாற்றி கேட்டிருந்தால் விடையளிக்கத் தடுமாறுகிறார்கள். எனவே, குறிப்பிட்ட பாடப்பகுதி அல்லது பாடக்கருத்திலிருந்து எவ்வாறெல்லாம் வினாக்களை உருவாக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து படிப்பதுடன், தேர்வில் வினாத்தாள் வாசிப்பதற்கான அவகாசத்தை முறையாக பயன்படுத்துவதும் உதவும்.

- பாடக்கருத்து வழங்கியவர்:என்.வி.எஸ்.கிருஷ்ணன், முதுகலை ஆசிரியர் (வேதியியல்), அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி, பாலூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

கணக்குகளில் கவலை வேண்டாம்

வேதியியலின் கணக்கு வினாக்கள் குறித்து சில மாணவர்கள் கவலைப்படுகிறார்கள். அப்பகுதி வினாக்களை சாய்ஸில் தவிர்க்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். உண்மையில், புரிந்துகொண்டு படிக்கும் இயல்புடைய மாணவர்கள் கணக்கு வினாக்களை கடினமாக உணர்வதில்லை. சமன்பாட்டின் எளிய மதிப்புகளில் பதிலீடு செய்யும் கணக்குகளே அதிகம் இடம்பெறுகின்றன. இதர வினாக்களை விட கணக்கு வினாக்களே முழு மதிப்பெண் பெற்றுத் தரும் என்பதாலும் அவை முக்கியத்துவம் பெறுகின்றன..

நேரம் பொருட்டல்ல

தேர்வு எழுதுவதற்கான நேரம் அதிகரித்திருப்பது, வேதியியல் தேர்வுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. எனவே மாணவர்கள் படித்ததை சிறப்பாக எழுதுவதுடன், சமன்பாடுகள்-கணக்குகளை தீர்ப்பதற்கும் போதுமான அவகாசம் வழங்கலாம். தேர்வின் நிறைவாக விடைத்தாளை முழுமையாக திருப்பி பார்ப்பதுடன், மதிப்பெண் குறைய வாய்ப்புள்ள ஒரு மதிப்பெண் மற்றும் கட்டாய வினாக்களில் முறையாக சரிபார்ப்பதும் அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x