Published : 11 Dec 2019 08:14 AM
Last Updated : 11 Dec 2019 08:14 AM

வாய்ப்புகளை தவற விடாதீர்கள், பேசுங்கள், பயம் வேண்டாம் மாணவர்களே...

மனோஜ் முத்தரசு

திறமை இருந்தும் சாதிக்க முடியவில்லை. வாய்ப்பிருந்தும் அதை பயன்படுத்த தைரியமில்லை. இந்த இரண்டு காரணிகள்தான் கிராமப்புற இளைஞர்களுக்கு தடைகளாக உள்ளன.

ஆசிரியர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியும். ஆனால் அது சரியா தவறா, பதில் கூறினால் சக மாணவர்கள் என்ன சொல்லுவார்கள். கேலி செய்வார்களோ அல்லது நம் பதில் தவறாக இருக்குமோ என்று அஞ்சுவதாலேயே வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்புகள் ஓடிவிடுகின்றன. கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தும் மாணவர்கள் தோற்றதாக சரித்திரமில்லை.

அப்படியாக தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கேரள மாணவிகள் தற்போது புகழ் பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில்எம்.பி.யாகவும் இருக்கிறார்.

வயநாடு தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளி ஒன்றில், புதிய அறிவியல் ஆய்வுக்கூடத்தை திறப்பதற்காக சமீபத்தில் சென்ற ராகுலுக்கு மலையாளம் தெரியாது. முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா சென்ற ராகுலின் ஆங்கில பேச்சை தவறாக மொழிபெயர்த்த இவரது கட்சிகாரரின் செயல் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அதேபோல், ராகுல் தமிழகம் வந்த போதும் இவரது பேச்சு தவறாக மொழிபெயர்க்கப்பட்டது.

இந்நிலையில், கேரள பள்ளியில் பேச தொடங்கிய ராகுல், “நான் ஆங்கிலத்தில் பேசுவதை மலையாளத்தில் மொழிபெயர்த்து சொல்வதற்கு யாராவது வருகிறீர்களா” என்று மாணவர்களைப் பார்த்து கேட்டார். உடனே எந்தவித தயக்கமும் இல்லாமல் தைரியமாக மேடை ஏறினார் 12-ம் வகுப்பு மாணவி சஃபா ஜெபின்.

ராகுல் காந்தியின் 10 நிமிட ஆங்கிலபேச்சை, எளிமையாகவும் நேர்த்தியாகவும் மொழிபெயர்த்தார் ஜெபின். ராகுல் பேச பேச அவர் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. உடனடியாக மலையாளத்தில் மொழிபெயர்த்து கூறினார். ஒவ்வொரு முறை அவர் சொல்லும் போதும் மாணவர்களின் ஆரவாரம் அரங்கை நிறைத்தது.

சஃபாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. வாய்ப்பைப் பயன்படுத்தி கொண்டு உடனடியாக மேடை ஏறிய ஜெபின், ஒரே நாளில் புகழ் பெற்று, தனக்கான அங்கீகாரத்தை பெற்றார். அதேபோல், மற்றொரு பள்ளிக்கு சென்ற ராகுலின் பேச்சுக்கு, அங்கும் பள்ளி மாணவி ஒருவர் மொழிபெயர்த்தார்.

மாணவர்களின் தயக்கத்துக்கு, ‘‘எல்லோர் முன்பாகவும் நாம் அவமானப்பட்டு விடுவோமோ என்ற அச்சம்தான் காரணம்’’ என்கிறார் அரசு மனநல மருத்துவர் விமலாதேவி.

இதுகுறித்து அவர் கூறியதாவது:சரியோ தவறோ முதலில் அதை வெளியே சொல்ல வேண்டும். வகுப்பறையில் மாணவர்கள் கூறும் பதில் தவறாக இருந்தாலும், ஆசிரியர்கள் அவர்களை வாழ்த்தவேண்டும். அப்போதுதான் முயற்சி செய்ய மாணவர்களுக்கு ஆர்வம் வரும். இதை பல ஆசிரியர்கள் செய்ய தவறுகிறார்கள்.

பொதுவாக, தொடக்கப் பள்ளியில், ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிகிறதோ இல்லையோ எதையாவது குழந்தைகள் கூறும். ஆனால், வளர வளர பயம் தொற்றிக் கொள்கிறது. தைரியமாக எழுந்து, ஒருவேளை தவறான பதில் சொன்ன பிள்ளையை, ஆசிரியர்கள் அவமானப்படுத்திவிட்டால், அதன்பிறகு அவர்கள் எதற்கும் வாய் திறக்கமாட்டார்கள். இந்தப் போக்கு ஆசிரியர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்களுடைய பதில் தவறாக இருந்தாலும், அவர்களுடைய முயற்சியைப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். மறக்காமல் சரியான பதிலை கூறவேண்டும்.

இவ்வாறு மருத்துவர் விமலாதேவி கூறினார்.

எனவே மாணவர்களே, முதலில் தைரியமாக பதில் கூற பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x