Published : 11 Dec 2019 08:03 AM
Last Updated : 11 Dec 2019 08:03 AM

செய்திகள் சில வரிகளில்: கல்விக் கடன்  தள்ளுபடி இல்லை: அமைச்சர் மறுப்பு

கல்விக் கடன் தள்ளுபடி இல்லை: அமைச்சர் மறுப்பு

புதுடெல்லி

நாடாளுமன்ற மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகள் கொடுத்த புள்ளிவிவரப்படி, வசூலாகாமல் நிலுவையில் உள்ள கல்விக் கடன் தொகை 2019 செப்டம்பரில் ரூ.75,450.68 கோடியாக உயர்ந்துள்ளது. கல்விக் கடனை திரும்ப செலுத்தக் கோரி பொதுத்துறை வங்கிகள் கொடுத்த நெருக்குதல் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக எந்த தகவலும் இல்லை. கல்விக் கடனை தள்ளுபடி செய்வது குறித்து எந்த திட்டமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் நிர்மலா கூறினார்.- பிடிஐ

ஜம்மு காஷ்மீரில் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் அதிகமானப் பனிப்பொழிவுள்ள பகுதிகளைச் சேர்ந்த 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு டிசம்பர்10 முதல் பிப்ரவரி 22 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.- பிடிஐ

375 நினைவுச் சின்னங்களுக்கு மகாராஷ்டிராவில் 80 காவலாளிகள்

அவுரங்காபாத்: மகாராஷ்டிர தொல்லியல் துறையில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 375 வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. இவற்றை 80 காவலாளிகள் மட்டுமே கண்காணித்து வருகின்றனர். இதனால் நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது என்று கூறுகின்றனர்.

மாநில அரசு பணியாட்கள் நியமனத்தில் கண்டிப்பான கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. இங்குள்ள பல நினைவுச் சின்னங்களுக்கு இரவில் காவலர்களே கிடையாது. இங்கு தொல்லியல் துறையில் இருக்கும் 80 காவலாளிகளும் பணி ஓய்வு பெற்று வருகின்றனர். இதனால் குறைந்தபட்சம் ஒரு நினைவுச் சின்னத்துக்கு ஒருவர் வீதம் காவலாளிகளை நியமிக்க வேண்டும்.

இங்கு காவலாளிகள் 8 மணி நேரம் பணி முடிந்தும் 4 மணி நேரம் கூடுதல் பணி செய்கின்றனர். எனினும் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களையும் கண்காணிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க போதிய காவலாளிகளை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x