Published : 10 Dec 2019 03:10 PM
Last Updated : 10 Dec 2019 03:10 PM

பொறியியல் பட்டதாரிகளும் இனி அரசுப்பள்ளி ஆசிரியர் ஆகலாம்: அரசாணை வெளியீடு

பொறியியல் பட்டதாரிகள் 'டெட்' தேர்வு எழுதி இனி ஆசிரியர் ஆகலாம். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

எனினும் பி.எட். படிப்பை முடித்த பொறியாளர்கள் மட்டுமே டெட் தேர்வை எழுத முடியும்.

ஆரம்ப காலத்தில் கலை, அறிவியல் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே பி.எட். படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்னால் பொறியியல் பட்டதாரிகளும் பி.எட். படிக்க அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 20% இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. எனினும் அவர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET- Teachers Eligibility Test) எழுத அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால் பி.எட். படிக்க விரும்பும் பொறியாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால் பி.எட். படித்தும், பொறியியல் பட்டதாரிகளால் ஆசிரியர் ஆக முடியாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசின் உயர்கல்வித் துறை சார்பில் சமநிலைக் குழு அரசாணை வெளியாகியுள்ளது. அதன்படி, பொறியியல் பட்டதாரிகள் டெட் தேர்வு எழுதி இனி ஆசிரியர் ஆகலாம். அவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்குக் கணித ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x