Published : 10 Dec 2019 12:24 PM
Last Updated : 10 Dec 2019 12:24 PM

பணக்காரர்களுக்கு ரசகுல்லா; அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உப்பும் ரொட்டியுமா?- பிரியங்கா கேள்வி

பணக்காரர்கள் ரசகுல்லா சாப்பிட வேண்டும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ரொட்டியும் உப்பும் மட்டுமே கிடைக்குமா என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடி அரசு 2019-20 ஆம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வி நிதி ஒதுக்கீட்டில் ரூ3,000 கோடியைக் குறைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, ''மோடி அரசு தனது பணக்கார நண்பர்களுக்காக ரூ.5.5 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்கிறது. ஆனால் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ3,000 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?

பணக்காரர்கள் ரசகுல்லா சாப்பிட வேண்டும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் ரொட்டியும் உப்பும் மட்டுமே கிடைக்குமா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டுக்கான ஒதுக்கீடான ரூ.50,113 கோடியிலிருந்து 10% அதிகரித்து, நடப்பாண்டுக்கான நிதி ரூ.56,536 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் இத்தொகையில் ரூ.3 ஆயிரம் கோடியை மத்திய அரசு குறைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி வரும் நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.53,536 கோடி மட்டுமே வழங்கப்பட உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பொருளாதார சூழல் மற்றும் செலவினங்களைக் கருத்தில் கொண்டு நிதித்துறை அமைச்சகம், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் இதைத் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x