Published : 10 Dec 2019 11:06 AM
Last Updated : 10 Dec 2019 11:06 AM

பள்ளிக்கல்வி நிதியில் ரூ.3,000 கோடியை குறைக்க மத்திய அரசு முடிவு; மிகவும் தவறு: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

பள்ளிக்கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.3,000 கோடியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது கவலையளிப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (டிச.10) வெளியிட்ட அறிக்கையில், "நிதி நெருக்கடியை காரணம் காட்டி, 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.3,000 கோடியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல என அனைத்துத் தரப்பினரும் கூறிவரும் நிலையில், இந்த நிதிக் குறைப்பு மிகவும் கவலையளிக்கிறது.

பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பாண்டில் ரூ.56,536 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் இது தாராளமான நிதி ஒதுக்கீடு அல்ல. 2014-15 ஆம் ஆண்டிலிருந்து பள்ளிக்கல்விக்கான ஒதுக்கீடு ஆண்டுக்கு 10% என்ற அளவில் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தான் கடந்த ஆண்டுக்கான ஒதுக்கீடான ரூ.50,113 கோடியிலிருந்து 10% அதிகரித்து, நடப்பாண்டுக்கான நிதி ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டது. இதை குறைக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு நிதியமைச்சகம் அழுத்தம் கொடுத்து சாதிக்க நினைப்பது கல்வித் துறையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒரு நாடு நீடித்த வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய 3 முதன்மைத் துறைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். கல்வி வளர்ச்சி குறித்து ஆராய அமைக்கப்பட்ட கோத்தாரி குழுவும் இந்த உண்மையை மனதில் கொண்டு தான், கல்வித்துறைக்கு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 6 விழுக்காட்டை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செலவிட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

இன்றைய நிலையில் இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ. 210 லட்சம் கோடி ஆகும். கோத்தாரி குழு பரிந்துரைப்படி கல்விக்காக மட்டும் ரூ.12.60 லட்சம் கோடி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக செலவிடும் ரூ.4.5 லட்சம் கோடி, அதாவது உற்பத்தி மதிப்பில் 2 விழுக்காட்டைக் கூட தாண்டாது.

பள்ளிக்கல்விக்கு பரிந்துரைக்கப்பட்ட நிதியில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே மத்திய, மாநில அரசுகள் செலவிடும் நிலையில், மத்திய அரசு ஒதுக்கிய தொகையிலும் ரூ.3,000 கோடியை குறைப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும். மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா ஆகிய பள்ளிகளில் சுமார் 50% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், அவற்றை நிரப்பும் வகையில் அண்மையில் தான் ஏராளமான புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கான ஊதியம் காரணமாக மத்திய அரசு பள்ளிகளின் செலவுகள் அதிகரித்துள்ளன.

அதுமட்டுமின்றி, தொடக்கத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கமாகவும், பின்னர் இடைநிலைக் கல்வி இயக்கமாகவும் செயல்படுத்தப்பட்டு வந்த திட்டம் இப்போது முழு கல்வி இயக்கமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கமே கல்வித்தரத்தை உயர்த்துவது தான். இத்திட்டத்தின் பயனாளிகளும், திட்டச் செலவுகளும் அதிகம் என்பதால் இத்திட்டத்திற்கு அதிக நிதி தேவைப்படும். இப்படியாக பள்ளிக்கல்வித்துறையின் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், அந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தால், மாணவர்களின் கல்வித்தரமும் குறைந்து விடும்.

மத்திய அரசு மிகக்கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 2019-20 ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை ரூ.7.03 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களிலேயே, அதாவது அக்டோபர் மாத இறுதிக்குள்ளாகவே, மத்திய அரசின் வரவுக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம் ரூ.7.20 லட்சம் கோடியை தாண்டி விட்டது. மீதமுள்ள 5 மாதங்களையும் கணக்கிட்டால் நாட்டின் நிதிப்பற்றாக்குறை ரூ.10 லட்சம் கோடியை தாண்டி விடும். இதை சமாளிக்க முடியாது என்பதால் தான் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய நிதியமைச்சகம் குறைத்து வருகிறது.

மத்திய அரசின் கோணத்திலிருந்து பார்த்தால் இது சரியாகத் தோன்றலாம்; ஆனால், மாணவர்களின் எதிர்காலம் குறித்த கோணத்தில் இருந்து பார்த்தால் இது மிகவும் தவறு ஆகும். இது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி செலவு அல்ல, முதலீடு என்பதை மத்திய நிதி அமைச்சகம் உணர வேண்டும். மத்திய அரசின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக பிற துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை சற்று குறைக்கலாமே தவிர, பள்ளிக்கல்வியில் கை வைக்கக்கூடாது. பள்ளிக்கல்விக்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x