Published : 10 Dec 2019 07:30 AM
Last Updated : 10 Dec 2019 07:30 AM

குழந்தைகள் திருமணம் பற்றி தகவல் கொடுத்தால் பணப்பரிசு: ஒடிசா மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பிர்ஹாம்பூர்

ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்ட நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்த மாவட்டத்தில் யாராவது குழந்தை திருமணம் நடப்பது பற்றி தகவல் கொடுத்தால் அவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த பணம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு மைய நிதியிலிருந்து வழங்கப்படும் என்று நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று மாவட்ட அங்கன்வாடி மையத்தில் மாவட்ட நிர்வாகிகளின் மாதாந்திர கூட்டம் நடந்தது. அப்போது குழந்தை திருமணத்தை கட்டுபடுத்துவது குறித்து ஆலோசித்து இந்த பணப் பரிசு திட்டத்தை அறிவிப்பது என்று முடிவெடுத்துள்ளனர்.

இதில் குழந்தை திருமணம் பற்றி தகவல் கொடுப்பவரின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் உறுதி அளித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர்விஜய் அம்ருதா குலான்ஜீ கூறுகையில், “கஞ்சம் நிர்வாகத்துடன் சேர்ந்து என்ஜிஓ.க்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களும் உள்ளன. இவர்கள் இந்த ஆண்டில் மட்டுமே 38 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். குழந்தை திருமணத்துக்கு தயாராவது பற்றி இங்குள்ள மக்களுக்கு தெரிகிறது. ஆனால் தகவல் கொடுப்பதால் கிராமத் தலைவர்கள் மூலம் ஏற்படும் பின்விளைவுகளை நினைத்து அஞ்சுகின்றனர். பொதுமக்கள் பயமின்றி தகவல் கொடுக்க முன்வர வேண்டும் என்பதற்காகவும் இந்தப் பணப் பரிசு திட்டம் கொண்டு வந்துள்ளோம். சரியான நேரத்தில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தால் ஒரு சிறுமியின் வாழ்க்கையை காப்பாற்ற முடியும்.

இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 3000 பள்ளிகளில் 4.50 லட்சம் மாணவர்கள் உள்ளனர். அதுபோக பல்வேறு அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்கள் என அனைவரும் குழந்தை திருமணத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x