Published : 10 Dec 2019 07:29 AM
Last Updated : 10 Dec 2019 07:29 AM

சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்துக்கு வயது 2000

சிங்கப்பூர்

தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் சிங்கப்பூரிலும் கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாகத்தமிழர்கள் வாழ்ந்து வருவதாக புதிய புத்தகம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. ‘சஞ்சரிப்பவர்கள் முதல் குடியேறிவர்கள் வரை - தென்கிழக்கு ஆசியா மற்றும் சிங்கப்பூரில் தமிழர்கள்’ ('From Sojourners To Settlers - Tamils in Southeast Asia and Singapore') என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்புத்தகம் தமிழர்களின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் புதிய கோணத்தில் ஆராய்ந்துள்ளது. சிங்கப்பூர் தகவல் மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் ஈஸ்வரன் சிங்கப்பூரில் உள்ள இந்திய பண்பாட்டு மையத்தில் கடந்த சனிக்கிழமை இப்புத்தகத்தை வெளியிட்டார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் சிங்கப்பூரிலும் உள்ள தமிழர்களின் அவ்வளவாக அறியப்படாத வரலாற்று பக்கங்களை இப்புத்தகம் வெளிக்கொணர முயன்றுள்ளது. இதற்காகப் பல வரலாற்று ஆவணங்களும் ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டாகும். சிங்கப்பூர் தேசிய கலைப்பொருட்கள் சேகரிப்பு மையத்தில் தற்போது இந்த கல்வெட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக சிங்கப்பூர் நதியோரம் இது கிடைத்துள்ளது. 1843-ல் பிரிட்டிஷார் இந்த கல்வெட்டை வெடிவைத்து தகர்க்க முயன்றனர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த கல்வெட்டில், ‘கேசரிவ’ என்ற சொல் இடம்பெற்றுள்ளதாக இப்புத்தகத்தில் பங்காற்றியவர்களில் ஒருவரான ஐயன் சின்கிளேர் தெரிவித்துள்ளார். நெடுங்காலம் அரசாட்சிப் புரிந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த சோழ மன்னர்களைக் குறிக்கும் சொல் ‘பரகேசரிவர்மன்’. இந்த சொல்லின் ஒரு பகுதியாகத்தான் ‘கேசரிவ’ இருக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இப்புத்தகம் குறித்து அமைச்சர் ஈஸ்வரன் கூறுகையில்,“சிங்கப்பூர் வாழ் தமிழர்களை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். ஆனால், அவர்களை வரையறுப்பது மிகவும் கடினம். அத்தகைய முயற்சி அரசியல் ரீதியாகவும் மொழி அடிப்படையிலும் சிக்கலானது. இந்தியாவின் பன்மைத்துவ கலாச்சார பின்னணியும், நிலப்பரப்பும், இனக்குழுக்களும், பன்மொழி மக்களையும் ஒருங்கே கொண்ட குட்டி தேசம் சிங்கப்பூர். சிங்கப்பூரின் தனித்துவத்துக்கு பல தமிழர்கள் வித்திட்டுள்ளனர். சிங்கப்பூரின் தற்கால தமிழ்க் கலாச்சாரத்துக்கு அவர்களின் பங்கு அளப்பரியது. சிங்கப்பூரின் முதல் உள்ளூர் மொழி பத்திரிகையை தொடங்கியது தமிழ் முஸ்லீம்கள்தாம். ஐரோப்பிய வங்கி முறை இந்தியாவுக்குள் 19-ம் நூற்றாண்டில்தான் கால்பதித்தது. அதற்கு முன்புவரை சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு கடன் வழங்கியவர்கள் செட்டியார் சமூகத்தினரே. சிங்கப்பூர் வாழ் இந்தியர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே.

சிங்கப்பூரின் எதிர் காலத்தைச்செதுக்குவதில் அவர்களுடைய பங்கு மகத்தானது. எங்கள் நாட்டின் நான்கு அலுவல் மொழிகளில் ஒன்று தமிழ். தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்த்தெடுக்க சிங்கப்பூர் அரசும் இந்நாட்டின் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்” என்றார்.

ஆங்கிலம், மேண்டரின், மலாய் ஆகியவை சிங்கப்பூரின் பிற அலுவல் மொழிகளாகும். சிங்கப்பூரை தவிர அதிகளவில் தமிழர்களை கொண்ட நாடு மலேசியா என்பது குறிப்பிடத்தக்கது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x