Published : 10 Dec 2019 07:24 AM
Last Updated : 10 Dec 2019 07:24 AM

189 நாடுகளின் ஐ.நா. தரவரிசை அட்டவணை வெளியீடு: மனிதவள மேம்பாட்டில் இந்தியா முன்னேற்றம்

புதுடெல்லி

ஐ.நா. மனிதவள மேம்பாட்டு குறியீட்டு தரவரிசையில், இந்தியா 129-வது இடத்தை பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின், ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் ஆய்வு செய்து மனித வள மேம்பாட்டின் குறியீடு பற்றி தரவரிசை அட்டவணை வெளியிட்டு வருகிறது. ஒரு நாட்டில் வாழும் மக்களின் வாழ்நாள், ஆரோக்கியமான வாழ்வு, அனைத்துத் தகவல்களும் எளிதாக கிடைப்பது, வசதிகள் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு உலகளவில் நாடுகள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான மனிதவள மேம்பாட்டு குறித்த தரவரிசை அட்டவணையை ஐ.நா. தற்போது வெளியிட்டுள்ளது. 21-ம் நூற்றாண்டின் மனிதவள மேம்பாட்டின் ஏற்றத்தாழ்வு என்ற அறிக்கை தொடர்பான ஆய்வை ஐ.நா மேற்கொண்டது. அதன்படி, 130-வது இடத்தில் இருந்து ஒருபடி முன்னேறி 0.0647 புள்ளிகளுடன் இந்தியா 129-வது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து, ஐ.நா. வளர்ச்சி திட்டத்தின் இந்திய பிரதிநிதியான ஷோகோ நோடா நேற்று கூறியதாவது:கடந்த 2005-2016 வரை இந்தியாவில் சுமார் 27.1 கோடி மக்கள், வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்களான பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (நிதி சேர்க்கைக்கு) மற்றும் ஆயுஷ்மான் பாரத் (உலகத் தரத்தில் சுகாதார வசதி) போன்ற திட்டங்கள் நல்ல பலனை தந்துள்ளன.

மக்களின் ஆயுட்காலம், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பில் ஏறக்குறைய 30 ஆண்டு கால வளர்ச்சியின் காரணமாக, இந்தியாவில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் வறுமை, வியத்தகு அளவு குறைந்துள்ளது. மனிதவள மேம்பாட்டு குறியீட்டின் படி, வேறு எந்த பிராந்தியமும் இந்தியாவை போன்ற விரைவான மனித வளர்ச்சியை அடையவில்லை.

கடந்த 1990 முதல் 2018-ம் ஆண்டு வரை தெற்கு ஆசிய நாடுகள் 46 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளன. கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியம் 43 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளன. ஆனால், நாடுகளின் வளர்ச்சியை பார்க்கும்போது இந்தியாவின் எச்.டி.ஐ. மதிப்பு 50 சதவீதம் (0.431 முதல் 0.647 வரை) அதிகரித்துள்ளது.

இது நடுத்தர மனித மேம்பாட்டுக் குழுவில் (0.634) உள்ள நாடுகளுக்கு சராசரியை விடவும், மற்ற தெற்காசிய நாடுகளின் சராசரியை விடவும் (0.642) அதிகமாக உள்ளது.

அதேபோல், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளும், மனித வளர்ச்சியைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளன. வறுமையை குறைப்பதில் இந்தியா பெரும் வெற்றி பெற்றுள்ளது. தெற்காசியாவில், மனிதர்களின் ஆயுட்காலம் மற்றும் பள்ளிப்படிப்பின் ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, 1990 மற்றும் 2018-க்கு இடையில், பிறந்த குழந்தைகளின் ஆயுட்காலம் 11.6 ஆண்டுகள் அதிகரிக்கும். இந்தியாவில் தனிநபர் வருமானம் 250 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு நோடா கூறினார்.

ஐ.நா. மனிதவள மேம்பாட்டு தரவரிசை அறிக்கையின்படி, வறுமை நிகழ்வுகள், நாடுகளுக்கு நாடு பெரிதும் வேறுபடுகின்றன. பல்வேறு வகையான ஏழைகள் உலக அளவில் 1.3 பில்லியன் உள்ளனர். அதில், 661 மில்லியன் ஏழைகள் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ளனர். தெற்காசியாவில் மட்டும் மொத்த ஏழைகளின் எண்ணிக்கையில் 41 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர்.

இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தபோதிலும், உலக ஏழைகளில், 28 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவின் ஏழ்மை குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளை பாதிக்கின்றன. அத்துடன் தொழில்நுட்பம், கல்வி மற்றும் காலநிலை நெருக்கடியை அடுத்த தலைமுறையினர் சந்திப்பார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x