Published : 10 Dec 2019 07:19 AM
Last Updated : 10 Dec 2019 07:19 AM

செய்திகள் சில வரிகளில்- பெண்கள் பாதுகாப்பு: சிக்கிம் காவல் துறை புது திட்டம் அறிமுகம்

கோப்புப் படம்

பெண்கள் பாதுகாப்பு: சிக்கிம் காவல் துறை புது திட்டம் அறிமுகம்

கேங்டாக்:

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து சிக்கிம் மாநில காவல் துறையினர் இரவில் தனியாக வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு இலவச வாகன சேவையை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

இரவு வேளையில் போக்குவரத்து வசதியில்லாமல் தனியாக இருக்கும் பெண், காவல் துறை உதவிக்கு 1091 மற்றும் 78370 18555 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இரவு 10 முதல் காலை 6 மணி வரை இந்தத் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு இலவச வாகனம் ஏற்பாடு செய்யப்படும்.

இந்த எண்ணுக்கு அழைப்பு வந்ததும் கட்டுப்பாட்டு அறை வாகனம் அல்லது காவல் நிலைய அதிகாரிகளின் வாகனம் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - பிடிஐ

தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் குழந்தைகள் பிரிவு

புதுடெல்லி:

டெல்லி ராஜ்காட்டில் தேசிய காந்தி அருங்காட்சியகம் உள்ளது. இங்கு காந்தி தொடர்புடைய பல பொருட்கள் உள்ளன. ஒலி, ஒளி காட்சிகளைப் பார்க்க வசதிகள் உள்ளன. இங்கு தினமும் பல்வேறு பள்ளிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வருகின்றனர். எனினும், காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது தத்துவங்கள் பள்ளி மாணவர்களை சென்றடைய சிறப்பு பிரிவு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம். என்று அருங்காட்சியகத்தின் இயக்குநர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி 1869-ம் ஆண்டு போர்பந்தரில் பிறந்தார். மிக வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் மற்றவர்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்ற காந்தியின் கொள்கையை உணர்த்தும் வகையில் அந்த மாணவர் பிரிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x