Published : 09 Dec 2019 06:10 PM
Last Updated : 09 Dec 2019 06:10 PM

தடைகளைத் தகர்த்து கல்வி கற்கும் இந்தியக் குழந்தைகள்: 'சில்ரன் பிலிவ்' அதிகாரி

சென்னை

இந்தியக் குழந்தைகள் தடைகளைத் தகர்த்து கல்வி கற்று வருவதாக 'சில்ரன் பிலிவ்' நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் கிறிஸ்டியன் சில்ரன் ஃபண்ட் ஆஃப் கனடா (சிசிஎஃப்சி) தொண்டு நிறுவனம், பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள சிசிஎஃப்சி நிறுவனம், தற்போது 'சில்ரன் பிலிவ்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்தப் பெயர் மாற்ற விழாவில், ஆந்திரப் பிரதேச குழந்தைகள் உரிமை ஆணையத் தலைவர் ஹேமாவதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய சில்ரன் பிலிவ் சர்வதேச தலைமை திட்ட அதிகாரி பெலிண்டா பெனட், ''கல்வி மாபெரும் ஓர் ஆயுதம். இதன் மூலம் குழந்தைகள் தங்களின் உலகத்தையே மாற்றியமைக்க முடியும். சில்ரன் பிலிவ் மூலம் மத, கலாச்சார பேதமின்றி குழந்தைகளுக்கு உதவுகிறோம். இதனால் இந்தியக் குழந்தைகள் பயமில்லாமல், தங்களின் எதிர்காலத்தைத் திட்டமிடுகின்றனர்.

தடைகளைத் தகர்த்து கல்வி கற்கின்றனர். மாற்றத்தின் குரலாக இருக்கின்றனர். சின்னஞ்சிறு இளைஞர்கள் பெரும் கனவுகளோடு அவற்றை நனவாக்க முயற்சிக்கின்றனர். துன்பங்களுக்கு நடுவிலும் சமத்துவமின்மை, வன்முறை, பாகுபாடு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுகின்றனர்'' என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், 'குழந்தைகளின் குரல்கள்: சாட்சியங்களின் தொகுப்பு' என்ற பெயரில், ஆவணத்தை குழந்தைகள் வெளியிட்டனர். இதை தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார மையத்தின் துணை இயக்குநர் ஜூலியானா ஜின் பெற்றுக்கொண்டார். இதில் 'சில்ரன் பிலிவ்' தலைமைச் செயல் அதிகாரி பேட்ரிக் கனகசிங்கம், தேசிய இயக்குநர் நான்சி அனபெல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

'தோழமை' தொண்டு நிறுவன இயக்குநர் வாழ்த்துரையை வழங்கினார். இதில் பங்கேற்ற சிறுவர்களும், சிறுமிகளும் தங்களும் வலி மிகுந்த வாழ்க்கை மாறிய விதம் குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x