Published : 09 Dec 2019 01:22 PM
Last Updated : 09 Dec 2019 01:22 PM

சலூன் நூலகம்: படித்தால் கட்டணச் சலுகை- அசத்தும் இளைஞர்!

சலூனுக்குள் நூலகத்தை அமைத்து, அதை வாசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, முடி திருத்துவதில் கட்டணச் சலுகை கொடுத்து வருகிறார் பொன்.மாரியப்பன் என்னும் இளைஞர்.

தூத்துக்குடி, மில்லர்புரத்தைச் சேர்ந்த சிகையலங்காரக் கலைஞர் பொன்.மாரியப்பன். வாசிப்பை நேசிக்கும் இவர், வறுமை காரணமாக 8-ம் வகுப்பையே தாண்டாதவர். ஆனாலும் எழுத்தின் தாக்கத்தை உணர்ந்த அவர், தன்னுடைய வாடிக்கையாளர்கள் வாசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இதற்காக தன்னுடைய சலூனில் மினி நூலகத்தையே அமைத்துள்ளார். அதில் திருக்குறள், பாரதியார் கவிதைகள் தொடங்கி, எஸ்.ராம கிருஷ்ணன், புதுமைப்பித்தன் கதைகள், பெரியார், திருமந்திரம் எனக் கலவையான சுவைகளோடு புத்தகங்கள் வாங்கி அடுக்கப்பட்டுள்ளன. இங்கு க்ரியா தமிழ் அகராதி, திருமந்திரம் உள்ளிட்ட புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்துப் பேசும் பொன்.மாரியப்பன், ''புத்தகங்களை வாசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, முடி திருத்துவதில் கட்டணச் சலுகை கொடுத்து வருகிறேன். அடுத்த ஜனவரி மாதம் முதல் முடி திருத்தக் கட்டணம் ரூ.80 ஆக உயர்கிறது. எனினும் புத்தகம் வாசிப்பவர்களுக்கு ரூ.30 சலுகை அளித்து ரூ.50 மட்டுமே பெற உள்ளேன். இதற்குக் காரணம் வாசிப்புக் கலையை அனைவரிடத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான்.

வாடிக்கையாளர்களை வாசகர்களாக மாற்ற ஆசைப்படுகிறேன். எனது முயற்சியை அறிந்த தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கடைக்கே நேரில் வந்து பாராட்டினார். அத்துடன், சில புத்தகங்களைப் பரிசளித்துச் சென்றார்'' என்கிறார் பொன். மாரியப்பன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x