Published : 09 Dec 2019 11:21 AM
Last Updated : 09 Dec 2019 11:21 AM

ஐம்பொறி ஆட்சி கொள் 8- முட்டைகளை அடைகாத்த அந்த சிறுவன் யார்?

ஒவ்வொரு நாளும் பள்ளியால் துரத்தப்படுகிறான் அந்தச் சிறுவன். சில நாட்களாகச் சந்தடி செய்யாமல் பள்ளிக்குப் போவதும் வருவதுமாய் இருக்கிறான். இதை கவனிக்கும் அவனுடைய தாய் ஆச்சரியம் அடைகிறார். ஒரு நாள் அவன் பள்ளிக்குக் கிளம்பிய பிறகு அவனை பின் தொடர்கிறார்.

பள்ளிக்குச் செல்லவேண்டியவன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டின் பின்வாசல் வழியாக பின்புறமுள்ள கொட்டகையை அடைகிறான். அங்கிருக்கும் சில முட்டைகளை எடுத்து வைத்து அவற்றின் மேல் உட்கார்ந்து கொள்கிறான். இதை கண்ட அவனுடைய தாய்க்கு கோபம் வரவில்லை. மாறாக அவனை மெல்ல அழைத்து, “என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்கிறார்.

ஒரே மாதிரி கல்வி சரியா?

தாயின் அனுசரணையான அணுகுமுறை அவனுக்கு தெம்பளிக்கிறது. மெல்ல சொல்கிறான், “அம்மா இந்த கோழி உட்கார்ந்து அடைகாத்தால்தானே முட்டையில் இருந்து குஞ்சு பொறிக்கிறது? நான் உட்கார்ந்து அடைகாத்தால் குஞ்சு பொறிக்குமா என்று ஆராய்ச்சி செய்கிறேன்”.

அந்த முட்டை ஆராய்ச்சியாளர் வேறு யாருமல்ல இயற்பியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன்தான். இவ்வளவு ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட சிறுவனை எப்படி பள்ளி அனுமதிக்கும்! சொல்வதற்கு கீழ்ப்படிந்து அடங்கிப்போகும் ஒரே வகையான ரோபோக்களை அல்லவா பள்ளி முறை இன்றும் தயாரித்து வருகிறது. 19-ம் நூற்றாண்டில் இன்னும் பிற்போக்காகத்தானே இருந்திருக்கும்.

பள்ளிக்கூடங்களில் ஒழுங்கு பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கு யாரும் எதிரானவர்கள் அல்லர். ஆனால் ஒரே, மாதிரியான கல்வியைப் பெறும் அனைவரும் ஒரே மாதிரியாகத் தானே உருவாவார்கள். ஒரே மாதிரி சிந்தனைப் போக்குகளில் எப்படி வித்தியாசமான யுக்திகள் தோன்றும்? நம் குடும்பங்களிலும் பள்ளியிலும் ஒரே மாதிரி செயல்களைச் செய்வோர்க்கு எந்த விதத்திலாவது முக்கியத்துவம் உள்ளதா கவனியுங்கள். ஒரே விதமான பாதையில் நாம் பயணிப்பதன் மூலம் நாம் ஒரே இடத்தைத்தான் அடைய இயலும்.

புதிய இலக்கை நோக்கி

ராபர்ட் ஃபிரோஸ்ட் என்ற ஆங்கில கவிஞர். ‘தேர்ந்தெடுக்கப்படாத சாலை’ (The road not taken) என்ற ஒரு கவிதையை எழுதினார். அதில் அந்த கவிதையின் கதாநாயகன் இருவழிப் பாதை இருக்கும் ஒர் இடத்தை அடைவார். அதில் ஒரு வழி நல்ல தேய்ந்த பாதையாக பலரும் ஏற்கெனவே பயணம் சென்ற பாதையாக இருக்கும். மற்றொன்று பலரும் பயணிக்காத பாதையாக இருக்கும். இதில் இரண்டில் ஒன்றில் பயணம் செய்யவேண்டும் என்று வரும்போது அவர் சொல்வார்: “நான் பலரும் பயணிக்காத பாதையிலேயே செல்லப்போகிறேன். அப்போதுதான் புதிய இலக்கை அடையமுடியும்”.

இந்த வகையில் நாம் வித்தியாசமான சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள முயல வேண்டும். எந்த ஒரு செயல்பாட்டையும் வித்தியாசமாக முயற்சிக்கும் போதுதான் புதியன உருவாகும். உதாரணமாக, உலக்கை சுற்றிக்கொண்டிருந்த வீடுகளில் உரல் சுற்றினால் என்ன என்ற எண்ணம்தாம் அரைவை இயந்திரத்தின் கண்டுபிடிப்புக்கு வழிகோலியது. அவ்வளவு ஏன் கைகளால் மண்ணைத் தோண்டிய ஆதிமனிதனின் நகங்கள் ஓரு நாள் பிய்ந்திருக்கலாம். வலியால் அவர் துடித்திருக்கலாம். பின்னர் ஒருகுச்சியால் தோண்டத் தொடங்கி இருக்கலாம். பின்னர் இரும்பின் வரவு கலப்பையின் கண்டுபிடிப்பிற்கு இட்டுச்சென்றிருக்கலாம். ஒருநாள் நகம் உடைந்து வலித்தது ஆதிமனிதனுக்கு இன்னலை அளித்திருந்தாலும், தோண்டும் பணியானது அவன் கைகளில் இருந்து குச்சிக்கு மாறியதில் நகம் பிய்ந்துபோனது ஒரு சரித்திர நிகழ்வுதானே.

இப்படித்தானே வேறுபட்ட வழிகளுக்கு மாறும்போது வலிக்கும் அல்லது வலியே வேறுபட்ட சிந்தனைகளுக்கு வழிவகுக்கும். செயலில் நேர்மையோடும், உண்மையோடும் நடந்தால் அது ஆரோக்கியமான மாற்றத்திற்கு இட்டுச்செல்லும். சொகுசான பயணங்கள் சாதாரண இடங்களுக்குச் செல்கின்றன. சாகச பயணங்களே கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச்செல்கின்றன.

(தொடரும்)

கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x