Published : 09 Dec 2019 10:27 AM
Last Updated : 09 Dec 2019 10:27 AM

புத்தகங்களை வாசிப்பதன் மூலம் மனதை நல்வழிப்படுத்த முடியும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் அறிவுரை

மதுரை

தினமும் புத்தகங்கள் வாசிப்பதன் மூலம்மனதை நல்வழிப்படுத்த முடியும் என்று மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சரவணன் அறிவுறுத்தினார்.

மதுரை கீழச்சந்தைப்பேட்டை டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் நூல் வனம் சார்பாக வகுப்பறை நூலகம் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைவர்வே. சுரேந்திரன் பாபு தலைமை வகித்தார். பள்ளியின் செயலர் சதாசிவம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தங்கலீலா வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் ஜெசிந்தா அன்புமொழி வகுப்பறையில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்துக்குப் புத்தகங்களை வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர் சரவணன் பேசியதாவது:உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தகவாசிப்பு. தினமும் புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் நம் மனதை நல்வழிப்படுத்த முடியும். ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் ? என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதில் அளித்தார் மகாத்மா காந்தி. பணத்தைவிட அதிகமுக்கியமானவை புத்தகங்கள். ஏனெனில், புத்தகங்கள் நற்பண்புகளை வளர்ப்பவை.

பெண்கள் முன்னேற்றம் அடைய, கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுத்தால்போதும் என்றார் தந்தைபெரியார். புத்தகங்கள் சமூக மாற்றத்துக்கு வித்து. அதனால்தான் ஆல்பர்ட்ஐன்ஸ்டீன் மனிதனின் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் எனப் பதிலளித்தார்.

நண்பர்களின் பிறந்த நாளுக்குப் புத்தகங்களை அன்பளிப்பாக கொடுங்கள். பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் சிறந்த பரிசு புத்தகம்தான் என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். புத்தகங்களை வாசிப்போம். நேசிப்போம். பொது நூலகங்களுக்குச் செல்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆசிரியர்கள் சரண்யா, கீதா, பிரேமலதா, பாக்யலெட்சுமி, சுமதி, சித்ரா தேவி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பள்ளி துணைத் தலைவர் ஜெயராஜ், பொருளாளர் உதயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, ஆசிரியை வெங்கடலெட்சுமி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x