Last Updated : 09 Dec, 2019 09:40 AM

 

Published : 09 Dec 2019 09:40 AM
Last Updated : 09 Dec 2019 09:40 AM

இந்திய கிரிக்கெட் வரலாறு: வந்தார் சுனில் கவாஸ்கர்

1949-ம் ஆண்டு ஜூலை 10-ம்தேதி மும்பையைச் சேர்ந்த மீனாள் என்ற பெண்மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அன்றைய தினம்குழந்தையைப் பார்க்க வந்திருந்த அவரது உறவினரான நானா காகா என்பவரின் கண்ணில் வித்தியாசமான ஒரு விஷயம் பட்டது. குழந்தையின் காது மடலில் இயற்கையாகவே ஒரு ஓட்டை அமைந்திருந்தது. அதை மிகவும் விசேஷமானதாக நினைத்தார் நானா காகா.

அடுத்த நாள் காலையும் குழந்தையைப் பார்க்க வந்தவர் திடுக்கிட்டார். காரணம் குழந்தையின் காது மடலில் ஓட்டைஇல்லை. உடனடியாக குழந்தையை எடுத்துக்கொண்டு டாக்டரிடம் சென்றார். “மீனாளுக்கு பிறந்த குழந்தை இது இல்லை. அவளுடைய குழந்தையின் காது மடலில் ஓட்டை இருந்தது. ஆனால் இந்த குழந்தையின் காது மடலில் ஓட்டை இல்லை. குழந்தை மாறிவிட்டது” என்று முறையிட்டார்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் முந்தைய தினம் பிறந்த குழந்தைகளை சோதித்துப் பார்த்ததில், காதில் ஓட்டை உள்ள குழந்தை ஒன்று மீனவப் பெண்ணிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குளிப்பாட்டுவதற்காக குழந்தையை எடுத்துச் சென்ற சமயத்தில் குழந்தை மாறியது தெரியவந்தது. அப்படி காது மடலில் ஓட்டையுடன் பிறந்த குழந்தைதான் பின்னாளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த சுனில் கவாஸ்கர். தன்னுடைய வாழ்க்கை வரலாறான ‘சன்னி டேஸ்’ என்ற புத்தகத்தில் இதைப்பற்றி குறிப்பிட்டுள்ள சுனில் கவாஸ்கர், “அன்றைய தினம் என் உறவினர் மட்டும் காது மடலில் உள்ள ஓட்டையை கவனிக்காமல் இருந்தால், என் விதியே மாறியிருக்கும். இன்று நான் ஒரு மீனவராகி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பேன்” என்கிறார். கவாஸ்கரின் விதி மட்டுமா, கிரிக்கெட் உலகில் இந்தியாவின் விதிகூட மாறியிருக்கும்.

கவாஸ்கரின் அப்பா மனோகர் ஒரு கிரிக்கெட் வீரர். அவரது மாமா மந்திரி, இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர். தாங்கள் ஆடும் போட்டிகளைக் காண சுனில் கவாஸ்கரையும் அவர்கள் அழைத்துச் செல்ல இள வயதிலேயே அவரது மனதில் கிரிக்கெட் மீது காதல் ஏற்பட்டுள்ளது. பின்னாளில் தனது மாமாவான மந்திரியிடம் பேட்டிங் பயிற்சி பெற்ற கவாஸ்கர், பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட், கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மும்பை அணியில் இடம் பிடித்தார்.

மும்பை அணிக்காக ஆடிய போட்டிகளில் அவர் சதங்களாக குவிக்க, தேர்வுக் குழுவின் பார்வை அவர் மீது விழுந்துள்ளது. 1971-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய அணியில் முதல் முறையாக இடம் பிடித்தார் கவாஸ்கர். இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து பட்டோடி நீக்கப்பட்டு, இம்முறை அஜித் வடேகர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x